கடலூர் மாவட்டம் தமனாம்பேட்டை மற்றும் கட்டியாங்குப்பம் பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34,527 கோழிகள் உயிரிழந்துள்ள நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆய்வில் உறுதியான பறவைக் காய்ச்சல்
கடந்த அக்டோபர் 30-ம் தேதி தமனாம்பேட்டை கிராமத்தில் கோழிகள் தொடர்ந்து உயிரிழப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, உயிரிழந்த கோழிகளின் மாதிரிகள் மாநில ஆய்வகம் மற்றும் போபாலில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கட்டியாங்குப்பம் பகுதியிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
9 சிறப்புக் குழுக்கள் அமைப்பு
மத்திய அரசின் 2021-ம் ஆண்டு வழிகாட்டுதலின்படி, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 9 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கோழிகளைப் பாதுகாப்பான முறையில் குழி தோண்டிப் புதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் நாளிலிருந்து இதுவரை மொத்தம் 34,527 கோழிகள் உயிரிழந்துள்ளன. இன்று காலை நிலவரப்படி மட்டும் 1,550 கோழிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதியில் உள்ள 15 கோழிப்பண்ணைகளில் 5 பண்ணைகளில் மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள கோழிகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
90 நாட்களுக்கு கோழி வளர்க்கத் தடை
பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளில் அடுத்த 90 நாட்களுக்கு புதிதாகக் கோழிகளை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க உள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட பண்ணைகளில் பணியாற்றியவர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரத் துறை மூலம் ‘டாமிப்ளூ’ மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கோழி இறைச்சி சாப்பிடலாமா? – ஆட்சியர் விளக்கம்
பறவைக் காய்ச்சல் பாதிப்பு கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், வேறு பகுதிகளில் பாதிப்பு இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், 25 முதல் 35 நாட்கள் வயதுடைய கோழிகளையே இந்த வைரஸ் தாக்குவதாகவும், விற்பனைக்கு வரும் கோழிகள் பொதுவாக 65 முதல் 70 நாட்கள் வயதுடையவை என்பதால் அவற்றுக்கு பாதிப்பு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனவே, கோழி இறைச்சி உண்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இருப்பினும், பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
