Homeசெய்திகள்மாவட்டம்24 ஆண்டுகளாக அளந்து கொடுக்கப்படாத இலவச வீட்டுமனை பட்டா – அரசு கழிப்பறை, வண்ணத் தொலைக்காட்சி...

24 ஆண்டுகளாக அளந்து கொடுக்கப்படாத இலவச வீட்டுமனை பட்டா – அரசு கழிப்பறை, வண்ணத் தொலைக்காட்சி கட்டிடங்களில் வசிக்கும் 2 ஆதிதிராவிடர் குடும்பங்கள்; ரெட்டிக்குப்பம் கிராமத்தில் அவலம்!

-

- Advertisement -

வந்தவாசி அருகே ரெட்டிக்குப்பம் கிராமத்தில், தமிழக அரசு 24 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய வீட்டுமனை பட்டாவுக்கு இதுவரை நிலத்தை அளந்து ஒப்படைக்காததால், இரண்டு ஆதிதிராவிடர் குடும்பங்கள் அரசு கட்டிடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.24 ஆண்டுகளாக அளந்து கொடுக்கப்படாத இலவச வீட்டுமனை பட்டா – அரசு கழிப்பறை, வண்ணத் தொலைக்காட்சி கட்டிடங்களில் வசிக்கும் 2 ஆதிதிராவிடர் குடும்பங்கள்; ரெட்டிக்குப்பம் கிராமத்தில் அவலம்!

ஒரு குடும்பத்தினர் கிராமத்தில் உள்ள பொதுக் கழிப்பறை கட்டிடத்திலும், மற்றொரு குடும்பத்தினர் அரசு வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திற்காகக் கட்டப்பட்ட கட்டிடத்திலும் தங்கியுள்ளனர். பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மனு அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

36 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டிக்குப்பம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பட்டா வழங்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்த நிலையிலும், சம்பந்தப்பட்ட இடங்களை அளந்து பயனாளிகளிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகமும் வருவாய்த் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதனால் வீட்டுமனை கிடைத்தும் அதில் வீடு கட்டி வசிக்க முடியாத நிலைக்கு குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இரண்டு குடும்பங்கள் வேறு வழியின்றி கிராமத்தில் உள்ள அரசு கட்டிடங்களையே தங்களது வசிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.24 ஆண்டுகளாக அளந்து கொடுக்கப்படாத இலவச வீட்டுமனை பட்டா – அரசு கழிப்பறை, வண்ணத் தொலைக்காட்சி கட்டிடங்களில் வசிக்கும் 2 ஆதிதிராவிடர் குடும்பங்கள்; ரெட்டிக்குப்பம் கிராமத்தில் அவலம்!

கழிப்பறை கட்டிடத்தில் வசிக்கும் குடும்பம்

பொதுக் கழிப்பறை கட்டிடத்தில் வசித்து வரும் மாலா என்பவர் கூறுகையில், “தமிழக அரசு சார்பில் 2004ஆம் ஆண்டு எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த இடத்தை அளந்து கொடுக்கவில்லை. வீடு இல்லாததால் பல ஆண்டுகளாக அரசு பொதுக் கழிப்பறை கட்டிடத்திலேயே வசித்து வருகிறோம்.

கட்டிடத்திற்கு வெளியே சமையல் செய்து, உள்ளே சென்று சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. அப்போது கழிப்பறையிலிருந்து வீசும் துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டுதான் உணவு அருந்துகிறோம். இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று தூங்குகிறோம். பகல் நேரத்தில் மீண்டும் இங்கு வந்து தங்குகிறோம். மேலும், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி கட்டிடத்திற்குள் வந்து விடுவதால் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம்” என வேதனையுடன் தெரிவித்தார்.

வண்ணத் தொலைக்காட்சி கட்டிடத்தில் மற்றொரு குடும்பம்

இதேபோல், அஞ்சலை என்பவரது குடும்பமும் பல ஆண்டுகளாக அரசு வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திற்காகக் கட்டப்பட்ட கட்டிடத்தில் வசித்து வருகிறது. வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டும் நிலத்தை அளந்து ஒப்படைக்காததால் தங்களுக்கும் சொந்தமாக வீடு அமைத்துக்கொள்ள முடியாத நிலை நீடிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனப் புகார்

வீட்டுமனை பட்டா பெற்ற 36 குடும்பங்களின் சார்பில், அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் எனப் பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று பலமுறை மனு அளித்துள்ளதாகக் கூறுகின்றனர். தமிழக அரசு, சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடமும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

வீட்டுமனையை அளந்து ஒப்படைக்கக் கோரிக்கை

24 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவுக்கு உரிய நிலத்தை அளந்து ஒப்படைத்தால், தங்களால் சொந்தமாக வீடு கட்டி பாதுகாப்பாக வாழ முடியும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, ரெட்டிக்குப்பம் கிராமத்தில் பட்டா பெற்ற 36 குடும்பங்களின் நில உரிமை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க மாவட்ட நிர்வாகமும் வருவாய்த் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மதுரை செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு உயிரிழப்பு – புகார் அளித்தவரே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அதிர்ச்சி சம்பவம்!

MUST READ