Homeசெய்திகள்மாவட்டம்மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம், வைர நகைகள்...

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் முழுமையாக மீட்பு!

-

- Advertisement -

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றச்சாட்டுக்குள்ளான நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி, குற்றம் நடைபெற்ற விதம், நகைகள் மீட்கப்பட்ட விவரம் மற்றும் நகைக்கடை பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

11.384 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு

கொள்ளைச் சம்பவம் வெளியான ஆரம்பத்தில் 15 முதல் 18 கிலோ வரை நகைகள் திருடப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், நகைக்கடையின் இருப்புப் பதிவேடுகளைச் சரிபார்த்தபோது, மொத்தம் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகக் காவல் ஆணையர் தெரிவித்தார்.

இந்த நகைகள் அனைத்தும் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்றும் அவர் கூறினார்.

கட்டுமானப் பணிகளைப் பயன்படுத்திக் கொள்ளைத் திட்டம்

தனிஷ்க் நகைக்கடையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இதனைப் பயன்படுத்தி நிஷாந்த் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளையை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றினாரா என்பதை அறிய, சம்பவத்திற்கு முந்தைய இரண்டு நாட்களில் அவர் நகைக்கடைக்கு வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றை மறைப்பதற்காக பெயிண்ட் போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பொருள் என்ன என்பதை உறுதிப்படுத்த ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் காவல் ஆணையர் தெரிவித்தார்.

தந்தை சுரேஷின் பங்கு குறித்து விசாரணை

கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு நிஷாந்த் தனது தந்தை சுரேஷைத் தொடர்புகொண்டு, ஒரு பையை அவரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பையை வாங்கிச் சென்று வீட்டில் வைத்திருந்ததாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பையில் என்ன இருந்தது, கொள்ளைச் சம்பவம் குறித்து சுரேஷுக்கு எப்போது தெரியவந்தது, நகைகளை மறைப்பதில் அவருக்கு என்ன பங்கு இருந்தது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்படும் எனக் காவல் ஆணையர் கூறினார்.

மீனாட்சிக்கு கொள்ளை குறித்து முன்கூட்டியே தெரியுமா?

நிஷாந்தின் தோழி மீனாட்சிக்கு கொள்ளைச் சம்பவம் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும், அது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அவருக்கு ஓரளவு தெரிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. நிஷாந்துக்கும் மீனாட்சிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தி நகைகள் மீட்கப்பட்டதாக ஆணையர் விளக்கமளித்தார்.

நிஷாந்த் மட்டுமே நேரடியாகக் கொள்ளையில் ஈடுபட்டாரா?

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நிஷாந்த் மட்டுமே நேரடியாக நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

இருப்பினும், நகைக்கடை ஊழியர்கள் அல்லது வேறு யாருக்காவது இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்றும், கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணை நடத்தினால் மட்டுமே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

யூடியூப் மூலம் கொள்ளை வழிமுறைகளைக் கற்றுக்கொண்டாரா?

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் இதுவரை முழுமையாக மீட்கப்படவில்லை. நிஷாந்தின் செல்போனை ஆய்வு செய்து, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கொள்ளையடிக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும், கொள்ளைக்குப் பிறகு பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றதற்கான காரணம் என்ன? அந்தப் பயணங்களின்போது யாரிடமாவது உதவி கேட்டாரா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடன் பிரச்சினை மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு

இந்தக் கொள்ளை வழக்கில் ஒரு காவல் துணை ஆணையர், 6 உதவி ஆணையர்கள், 14 முதல் 15 காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், மதுரையைத் தாண்டி வெளிமாவட்டங்களிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நகைக்கடைகளுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்

தனிஷ்க் நகைக்கடையில் பர்குலர் அலாரம் (Burglar Alarm) வசதி இருந்தும் அது செயல்பாட்டில் இல்லாதது பாதுகாப்புக் குறைபாடு எனக் காவல் ஆணையர் சுட்டிக்காட்டினார்.

நகைக்கடைகளில் உள்ளே மட்டுமின்றி, கடைக்கு வெளியேயும் அனைத்து முக்கியப் பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மேலும், மதுரையில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்களை அழைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் ஆபத்தான செயல்கள்: 70 வழக்குகள் பதிவு

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவது, ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கி அதனைப் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகக் காவல் ஆணையர் தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்கள் தொடர்பாக இதுவரை 60 முதல் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்றக் காவலில் மூவரும் – அடுத்தகட்ட விசாரணை

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதன் மூலமே கொள்ளையின் முழுமையான பின்னணி, நகைகளை மறைத்த விதம் மற்றும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறிய முடியும் எனக் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, முக்கியக் குற்றச்சாட்டுக்குள்ளான நிஷாந்த் நவம்பர் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொள்ளை வழக்கில் மீட்கப்பட்ட நகைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி நிஷாந்திற்கு டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் – 11.9 கிலோ நகைகள் மீட்பு!

MUST READ