Homeசெய்திகள்மாவட்டம்திருமங்கலம் கூட்டுறவு அலுவலகத்தை முற்றுகையிட்ட 6 கிராம விவசாயிகள் – அடகு வைத்த தங்க நகைகளை...

திருமங்கலம் கூட்டுறவு அலுவலகத்தை முற்றுகையிட்ட 6 கிராம விவசாயிகள் – அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத் தரக் கோரி வாக்குவாதம்!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளைத் திருப்பித் தரக் கோரி, ஆறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

6 கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள்

திருமங்கலம் அருகே உள்ள தூம்பக்குளம், வீரப்பெருமாள்புரம், எஸ்.பி. நத்தம் உள்ளிட்ட ஆறு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வீரப்பெருமாள்புரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயத் தேவைகளுக்காக இந்தக் கடனைப் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

கடனைச் செலுத்தியும் நகைகள் திரும்பக் கிடைக்கவில்லை எனப் புகார்

வங்கியில் பெற்ற நகைக்கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும், வங்கி செயலர் மணிகண்டன் விவசாயிகளின் தங்க நகைகளைத் திருப்பி வழங்காமல் காலதாமதம் செய்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஆனால், இதுவரை தங்களுக்குச் சேர வேண்டிய நகைகள் திருப்பி வழங்கப்படவில்லை எனக் கூறி விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம்

இதையடுத்து, திருமங்கலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அலுவலகத்துக்குள் சென்று அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் தங்களது தங்க நகைகளை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரி கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால், அங்கிருந்த அலுவலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்ததாகக் கூறப்படுகிறது.

வங்கி செயலர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

தனியார் நகைக்கடைகளில் நடைபெற்ற நகைக் கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்த காவல்துறை, விவசாயிகளின் நகைகள் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், வங்கி செயலர் மணிகண்டன் விவசாயிகளின் தங்க நகைகளை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும், அவரைத் தேடிக் கண்டுபிடித்து நகைகளை மீட்டுத் தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கடனைச் செலுத்திய பிறகும் தங்களது நகைகள் கிடைக்கவில்லை என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற 75 வயது மூதாட்டி – மருமகள், பேரன் மீது புகார்!

MUST READ