Homeசெய்திகள்மாவட்டம்முதல்வர் கனவு இல்லத் திட்டத்தில் தவணைத் தொகை பெற லஞ்சம் கேட்டதாகப் புகார் – பஞ்சாயத்து...

முதல்வர் கனவு இல்லத் திட்டத்தில் தவணைத் தொகை பெற லஞ்சம் கேட்டதாகப் புகார் – பஞ்சாயத்து கிளர்க், 100 நாள் பணித்தள பொறுப்பாளர் பேசியதாக ஆடியோ வைரல்!

-

- Advertisement -

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே முதல்வர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிய பயனாளியிடம், நிலுவையில் உள்ள தவணைத் தொகையைப் பெற்றுத் தருவதற்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை பணம் கேட்டதாகப் புகார் எழுந்துள்ளது.முதல்வர் கனவு இல்லத் திட்டத்தில் தவணைத் தொகை பெற லஞ்சம் கேட்டதாகப் புகார் – பஞ்சாயத்து கிளர்க், 100 நாள் பணித்தள பொறுப்பாளர் பேசியதாக ஆடியோ வைரல்!

இதுதொடர்பாக பஞ்சாயத்து கிளர்க் மற்றும் 100 நாள் வேலைத் திட்டப் பணித்தள பொறுப்பாளர் ஆகியோர் பயனாளியிடம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காடான்குளம் பஞ்சாயத்தில் திருமலாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் – முத்துலட்சுமி தம்பதியினருக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு முதல்வர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி எனக் கூறப்படுகிறது. முதல் தவணைத் தொகை கிடைத்ததும், சமூக ஆர்வலர்களின் உதவியுடன் தம்பதியினர் வீட்டைக் கட்டி முடித்துள்ளனர். ஆனால், மீதமுள்ள இரண்டு தவணைத் தொகைகள் பஞ்சாயத்து அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்காததால் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நிலுவையில் உள்ள தவணைத் தொகைகளைப் பெறுவது தொடர்பாக பயனாளி செந்தில், காடான்குளம் பஞ்சாயத்து கிளர்க் ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.

அப்போது, பணம் கொடுக்க வேண்டும் என்றும், வேறு யாரிடமும் பணத்தைக் கொடுக்காமல் தன்னிடமே கொடுக்க வேண்டும் என்றும் கிளர்க் கூறியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருவரும் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல், 100 நாள் வேலைத் திட்டப் பணித்தள பொறுப்பாளர் புஷ்பம் என்பவரும் செந்திலைத் தொடர்புகொண்டு பேசியதாக மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை செலவு செய்தால்தான் மீதமுள்ள இரண்டு தவணைத் தொகைகளும் விரைவாகக் கிடைக்கும் என்றும், இல்லையெனில் காலதாமதம் ஏற்படும் என்றும் அவர் கூறியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிடம் ரூ.2,000 அல்லது ரூ.3,000 பெற்றுக்கொள்ளுமாறு பயனாளி கூறியபோது, அதனால் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும், ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை கொடுத்தால் விரைவாகத் தவணைத் தொகை கிடைக்கும் என்றும் புஷ்பம் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பணத்தை கிளர்க்கிடம் கொடுக்காமல் தன்னிடம் கொடுத்தால்தான் உயர் அதிகாரிகளுக்கும் கொடுக்க முடியும் என அவர் கூறியதாக வெளியாகியுள்ள ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிய பயனாளியிடம் தவணைத் தொகையை விடுவிக்கப் பணம் கேட்டதாக எழுந்துள்ள இந்தப் புகாரும், அதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

சாலையை ஆக்கிரமித்ததாகப் புகார்: அயப்பாக்கம் சுந்தர விநாயகர் ஆலயத்தை இடிக்கும் அதிகாரிகள்!

MUST READ