Homeசெய்திகள்மாவட்டம்மதுரை அருகே வனத்துறை இடம் எனக் கூறி கூலித் தொழிலாளியின் வீட்டை இடிக்க முயற்சி –...

மதுரை அருகே வனத்துறை இடம் எனக் கூறி கூலித் தொழிலாளியின் வீட்டை இடிக்க முயற்சி – ஜேசிபி இயந்திரத்தை மறித்து பெண்கள் போராட்டம்!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை கால்நடை மருத்துவமனை அருகே, வனத்துறைக்குச் சொந்தமான இடம் எனக் கூறி கூலித் தொழிலாளியின் வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளைக் கண்டித்து, அப்பகுதிப் பெண்கள் ஜேசிபி இயந்திரத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை அருகே வனத்துறை இடம் எனக் கூறி கூலித் தொழிலாளியின் வீட்டை இடிக்க முயற்சி – ஜேசிபி இயந்திரத்தை மறித்து பெண்கள் போராட்டம்!

நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான பிரேம்குமார் – ராணி தம்பதியினர், தங்களது இரண்டு குழந்தைகளுடன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று புதிதாகச் சிறிய வீடு ஒன்றைக் கட்டியதுடன், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின்சார வாரியத்திடமிருந்து மின் இணைப்பும் பெற்றுள்ளனர்.

ஜேசிபி இயந்திரத்தை மறித்து பெண்கள் எதிர்ப்பு

இந்த நிலையில், தம்பதியினர் வசிக்கும் இடம் வனத்துறைக்குச் சொந்தமானது எனக் கூறி, நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் வீட்டை இடிக்க வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அப்பகுதிப் பெண்கள், ஜேசிபி இயந்திரத்தை மறித்து தரையில் அமர்ந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் ஏராளமான வீடுகள் இருக்கும்போது, இந்த வீட்டை மட்டும் குறிவைத்து இடிக்க வருவதற்கு என்ன காரணம் என அவர்கள் கேள்வி எழுப்பினர். வனத்துறைக்குச் சொந்தமான இடம் என்றால் ஊராட்சி செயலாளர் எவ்வாறு ரசீது வழங்கினார் என்றும், மின்சாரத் துறை எவ்வாறு மின் இணைப்பு வழங்கியது என்றும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு

மேலும், வனத்துறைக்குச் சொந்தமான இடம் எனக் கூறப்படும் இதே பகுதியில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் மிகப்பெரிய குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர்.

அதிகாரிகள் கேட்ட பணத்தைக் கொடுக்க மறுத்ததாலும், தாங்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடன் வீட்டை இடிக்க வந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இடிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது

பெண்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து, வீட்டை இடிக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

2015 நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் நீதி கோரி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தடுத்து நிறுத்திய போலீசார்!

MUST READ