Homeசெய்திகள்மாவட்டம்திண்டுக்கல்லில் 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி – ரயில்வே அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய...

திண்டுக்கல்லில் 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி – ரயில்வே அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய எம்.பி., மேயர்!

-

- Advertisement -

திண்டுக்கல்லில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வரும் இடம் ரயில்வேக்குச் சொந்தமானது எனக் கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி மேயர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திண்டுக்கல்லில் 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி – ரயில்வே அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய எம்.பி., மேயர்!

திண்டுக்கல்லில் கடந்த 1986–87ஆம் ஆண்டு கரூர் அகல ரயில் பாதை விரிவாக்கப் பணிகளுக்காக கக்கன் தெருவில் வசித்து வந்த 60 குடும்பத்தினரின் வீடுகள் அகற்றப்பட்டன. அப்போது அந்தக் குடும்பங்களுக்கு மாற்று இடமாக, மாவட்ட வருவாய்த் துறையினரால் நத்தம் சாலையில் உள்ள அண்ணா காலனியில் ஒரு ஏக்கர் 54 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது அண்ணா காலனி, திண்டுக்கல் மாநகராட்சியின் 35-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் வீட்டு வரி, குடிநீர் குழாய் வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்தி வருகின்றனர். சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த இடம் ரயில்வே துறைக்குச் சொந்தமானது என்றும், பொதுமக்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்றும் கூறி, நேற்று ரயில்வே நிர்வாகத்தினர் அப்பகுதியில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 19) ஜேசிபி இயந்திரம் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், இடத்தைக் காலி செய்யுமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், ரயில்வே அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த இடம் அப்போதைய வருவாய்த் துறையினரால் மாற்று இடமாக ஒதுக்கப்பட்டதாகவும், இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தங்களது குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வந்தவாசியில் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் திருட்டு – சரக்கு வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

MUST READ