கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நாராயண நகர் பகுதியில் குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி எதிர்பாராதவிதமாகத் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாராயண நகர் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. கடந்த 2012-13ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தொட்டி, தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று இந்தக் குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் நான்கு தற்காலிகப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்மன் கோயில் கிராமத்தைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி (55) என்பவர் எதிர்பாராதவிதமாகத் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, தக்ஷிணாமூர்த்தியை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீசார், உயிரிழந்த தக்ஷிணாமூர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின்போது தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
