Homeசெய்திகள்மாவட்டம்வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 6 மாத அவகாசத்தை நழுவ விடக்கூடாது...

வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 6 மாத அவகாசத்தை நழுவ விடக்கூடாது – தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்!

-

- Advertisement -

தேனி மாவட்டம் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஆறு மாத கால அவகாசத்தை மலைக்கிராம மக்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 6 மாத அவகாசத்தை நழுவ விடக்கூடாது – தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்!

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்ற வரலாற்றுத் தரவுகளைக் கருத்தில் கொண்டே, மலைக்கிராம மக்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கடமலை – மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வருசநாடு, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து உள்ளிட்ட 18 ஊராட்சிகளில் வன உரிமை தொடர்பாகச் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

வன உரிமைக் குழுக்களை அங்கீகரித்து, வன உரிமைச் சட்டத்தின்படி உரிமைகளை நிலைநாட்டும் நோக்கில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில், வருசநாடு, சிங்கராஜபுரம், குமணன்தொழு ஆகிய ஊராட்சிகளில் தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பங்கேற்று ஆய்வு செய்தார்.

அப்போது கிராம மக்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஆறு மாத கால அவகாசம் மிக முக்கியமான வாய்ப்பு என்றும், இதனை மலைக்கிராம மக்கள் ஒருபோதும் தவறவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

தங்களிடம் உள்ள உரிய ஆவணங்களைச் சரியான முறையில் தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறினால் மீண்டும் இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கடமலை – மயிலை ஒன்றிய அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், வன உரிமை கோரும் அனைவருக்கும் வன உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(A)-ன் கீழ் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி, வன உரிமைக் குழுக்களைத் தேர்வு செய்வதே இன்றைய கூட்டங்களின் முக்கிய நோக்கம் என்றார்.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதியரசர் பி.ஆர். கவாய் தலைமையிலான குழு மலைக்கிராமங்களை நேரில் பார்வையிடும்போதோ அல்லது அதிகாரிகளை அழைத்து விசாரிக்கும்போதோ, அவர்கள் கோரும் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

உச்சநீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவின்படி, 30 நாட்களுக்குள் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மலைக்கிராம மக்களுக்கான ஆவணங்கள் குறித்து விளக்கிய அவர், பழங்குடியின மக்களுக்கான ஆவணங்கள் தனியாகவும், பழங்குடியினர் அல்லாத பிற பாரம்பரிய வனவாசிகளுக்கான ஆவணங்கள் தனியாகவும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய மலைவாழ் மக்கள் எட்டு பிரிவுகளின் கீழ் 20-க்கும் மேற்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதாகவும், 2006-ஆம் ஆண்டுக்கு முன்பு குறைந்தது 75 ஆண்டுகள், அதாவது மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்ததற்கான ஆவணங்கள் மற்றும் தரவுகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதில் எந்தவிதமான சிறப்புச் சலுகையும் கிடையாது என்றும், அனைத்தும் சட்ட விதிகளின்படியே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படும் மக்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆட்சியர், கிராம சபைக் கூட்டங்கள் தற்போது தொடங்கியுள்ளதால், இனிமேல்தான் அதிகாரப்பூர்வப் பட்டியல் வழங்கப்படும் என்றார். இதற்கு முன்பு 4,601 பேர் ஆக்கிரமிப்பாளர்களாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தக் கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையிலும் நேரடியாகவும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

கிராம சபைகள் மூலம் கிடைக்கும் பட்டியல்களின் அடிப்படையில்தான் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்பது தெரியவரும் என்றும், இந்த விவரங்கள் கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிட்டு வெளியேற்றுவது தொடர்பாக கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து தமிழக அரசு இரண்டு பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தது. அவற்றில் மலைக்கிராம மக்கள் எத்தனை காலமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர் என்பதற்கான வரலாற்றுத் தகவல்கள், வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த இரண்டு பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்ற வரலாற்றுத் தரவுகளை உச்சநீதிமன்றம் பரிசீலித்ததன் அடிப்படையிலேயே ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள் – வயலில் ஒப்பாரி வைத்து கும்மியடித்து வேதனையை வெளிப்படுத்திய பெண்கள்!

MUST READ