Homeசெய்திகள்மாவட்டம்மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள் – வயலில் ஒப்பாரி வைத்து...

மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள் – வயலில் ஒப்பாரி வைத்து கும்மியடித்து வேதனையை வெளிப்படுத்திய பெண்கள்!

-

- Advertisement -

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகி வரும் சம்பா பயிர்களைக் கண்டு விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வயல்களில் ஒப்பாரி பாடி கும்மியடித்து தங்களது வேதனையை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள் – வயலில் ஒப்பாரி வைத்து கும்மியடித்து வேதனையை வெளிப்படுத்திய பெண்கள்!

மன்னார்குடி அருகே உள்ள எளவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாமணியாற்றுப் பாசனத்தை நம்பி 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இதில், எளவனூர் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகி வருகின்றன.

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, பருவமழை மற்றும் ஆற்றுப் பாசனத்தை நம்பி எளவனூர் பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர். இதற்காக பலர் கடன் வாங்கியும், தங்களது நகைகளை அடகு வைத்தும் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். தற்போது சுமார் 55 நாட்களைக் கடந்துள்ள சம்பா பயிர்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்காததால், வயல்களில் பசுமையாக வளர வேண்டிய நெற்பயிர்கள் வாடி கருகி வருகின்றன.

பயிர்கள் கண்முன்னே கருகுவதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். வாங்கிய கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது, அடகு வைத்த நகைகளை எவ்வாறு மீட்பது என்ற கவலையில் விவசாயக் குடும்பங்கள் உள்ளன.

இதற்கிடையே, கருகி வரும் பயிர்களைக் கண்டு மனவேதனை அடைந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வயல்களில் இறங்கி ஒப்பாரிப் பாடல்களைப் பாடி கும்மியடித்துத் தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர். தாங்கள் உயிராகப் பாதுகாத்து வளர்த்த பயிர்கள் கண்முன்னே கருகுவதைப் பார்த்து கண்ணீர் மல்க அவர்கள் ஒப்பாரி வைத்த காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

ஒருபுறம் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் தங்களால் இயன்ற கடைசி முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் எஞ்சிய தண்ணீரை டீசல் இன்ஜின்கள் மூலம் மோட்டார் பம்புகளைப் பயன்படுத்தி வயல்களுக்குப் பாய்ச்சி வருகின்றனர். சில இடங்களில் வாய்க்கால்களில் தேங்கியுள்ள தண்ணீரைக் குடங்களில் எடுத்துவந்து பெண்களும் விவசாயிகளும் பயிர்களுக்கு ஊற்றி வருகின்றனர்.

எப்படியாவது பயிர்களைக் காப்பாற்றிவிடலாம் என்ற கடைசி நம்பிக்கையில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகள் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் அறுவடைக்குக் கைகொடுக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்றத் தேவையான தண்ணீரை வழங்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் வளர்மதி, கலைவாணி மற்றும் விவசாயி அன்பழகன் ஆகியோர் தங்களது வேதனையையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.

திருவாரூரில் தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள்! – கர்நாடகாவிடம் தண்ணீர் பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை

MUST READ