திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காளாஞ்சிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது போலீசார் பொதுமக்களைத் தாக்கி வலுக்கட்டாயமாகக் கைது செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காளாஞ்சிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுபானக் கடையை அகற்றக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் காரணமாக மன்னார்குடி – கும்பகோணம் – சென்னை செல்லும் முக்கிய சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே தவெக திருவாரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அவர் என்ன அதிகாரி எனக் கேட்டு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் தவெக நிர்வாகிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தவெக மாவட்டச் செயலாளரின் தூண்டுதலின் பேரில் மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி வலுக்கட்டாயமாகக் கைது செய்து, தனியார் பேருந்தில் ஏற்றிச் சென்றதாகப் போராட்டக்காரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
