திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டியில் தவறி விழுந்து இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (29). இவருக்குத் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன கைக்குழந்தை உள்ளது. இவர் வழக்கம்போல் நேற்று இரவு தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஸ்லட்ஜ் பம்ப் அறையில் ஆபரேட்டராகப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இரவு நேரக் கண்காணிப்புப் பணியில் இருந்த பூவரசன், எதிர்பாராத விதமாகக் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை பணிக்கு வந்த மற்றொரு தொழிலாளி, பூவரசனிடம் இருந்து பணியைப் பொறுப்பேற்பதற்காக அவரைத் தேடியுள்ளார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் சந்தேகமடைந்து கழிவுநீர் தொட்டியில் பார்த்துள்ளார்.
அப்போது பூவரசனின் கை மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாகக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய போலீசார், உயிரிழந்த பூவரசனின் உடலை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பூவரசனின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு, அவரது உடலை மீட்க விடாமல் தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
