Homeசெய்திகள்மாவட்டம்தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள்...

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்!

-

- Advertisement -

திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.

10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தீபாவளி சீட்டு

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ‘கைராசி சிட்ஸ்’ என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் அவரிடம் வாரந்தோறும் ரூ.100 மற்றும் ரூ.200 வீதம் பணம் செலுத்தி வந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் முறையாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததால், இந்த ஆண்டும் பலர் நம்பிக்கையுடன் சீட்டுப் பணம் கட்டியுள்ளனர்.

தீபாவளி முடிந்தும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை

தீபாவளிப் பண்டிகைக்கு குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வாங்கவும், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறப்படுகிறது.

தீபாவளி முடிந்த பின்னரும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என ரமேஷ்குமார் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை சுமார் ரூ.70 லட்சத்துக்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பணம் கேட்டால் மிரட்டுவதாகப் பெண்கள் புகார்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், பனியன் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தங்களுக்கு போனஸ் கிடையாது என்பதால், தீபாவளிச் செலவுக்காக வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் சிறுகச் சிறுகப் பணம் சேமித்து சீட்டில் கட்டியதாகத் தெரிவித்தனர்.

தற்போது பணத்தைத் திருப்பிக் கேட்டால் கொடுக்க மறுப்பதாகவும், அவரது வீடு மற்றும் கடைக்குச் சென்று பணம் கேட்டபோது, தாங்கள் கேமரா மற்றும் வாகனத்தை உடைத்துவிட்டதாகப் பொய்ப் புகார் அளிப்பதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், புகார் அளித்தால் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிடுவேன் என்றும், இது சிவில் வழக்கு என்பதால் பணம் கிடைக்க நீண்ட காலமாகும் என்றும் அவர் அலட்சியமாகப் பதிலளிப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்

தீபாவளிச் செலவுக்காகக் கடன் வாங்கியிருந்த நிலையில், சீட்டுப் பணமும் கிடைக்காததால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருவதாகப் பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து, 70-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தாங்கள் இழந்த பணத்தை விரைவாக மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் புகார் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்களான கயல்விழி மற்றும் நிவேதா ஆகியோர் தங்களது வேதனைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.

திருப்பூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 56 வயது தலைமை ஆசிரியர் மீது புகார்

MUST READ