புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகி சேதமடைந்துள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி மீமிசலில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாக்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் தண்ணீரின்றி கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மீமிசல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய விவசாயிகள், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர்களை சாகுபடி செய்ததாகவும், ஆனால் போதிய மழை இல்லாததால் பயிர்கள் அனைத்தும் கருகி பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கெனவே கடன் பெற்று விவசாயம் செய்த நிலையில், முந்தைய கடன்கள் இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், கடன் வழங்கிய நிறுவனங்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் நடப்பாண்டிலும் பயிர்கள் கருகியுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக தலையிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை 100 சதவீதம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண் விவசாயி ஒருவர், “தம்பி விஜய், உங்களை நம்பித்தான் ஓட்டு போட்டோம். ஆனால் எங்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை.
மக்களுடைய வரிப்பணத்தில் ஆட்சி நடத்தும் நீங்கள், மக்களுக்குத் தேவையான உதவிகளை முறையாகச் செய்ய வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். பயிர்கள் கருகியதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவிந்தராஜ், லியாகத்தலி, முத்து, காளியம்மாள் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றுப் பேசினர்.
