ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, அனுமதி பெறாமல் நாட்டுப்படகில் சென்று இளம் தம்பதிகள் நடத்திய ஆபத்தான போட்டோஷூட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும், பணம் பெற்றுக்கொண்டு அவர்களைப் படகில் அழைத்துச் செல்லும் மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் தீவைத் தமிழகத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் அமைந்துள்ளது. கடலின் நடுவே அமைந்துள்ள இப்பாலம் மற்றும் அதன் அருகே உள்ள ரயில் பாலத்தின் அழகிய காட்சிகளைக் காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அவர்கள் சாலைப் பாலத்தின் மீதும், கடற்கரைப் பகுதிகளிலும் நின்று புகைப்படங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இளம் தம்பதிகள் சிலர் புகைப்படக் கலைஞருடன் இணைந்து, நாட்டுப்படகில் பாம்பன் கடலுக்குள் சென்றுள்ளனர். அங்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, பாலத்தின் அருகே படகில் நின்றபடி ஆபத்தான முறையில் போட்டோஷூட் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போட்டோஷூட் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆபத்தான முறையில் படகில் சென்று போட்டோஷூட் நடத்தியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான செயல்களைத் தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சுற்றுலாப் பயணிகளை நாட்டுப்படகில் அழைத்துச் செல்லும் மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
