Homeசெய்திகள்மாவட்டம்ரிஷிவந்தியம் அருகே 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மாயம் – சென்னையில் இரண்டு தனிப்படைகள் தீவிர...

ரிஷிவந்தியம் அருகே 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மாயம் – சென்னையில் இரண்டு தனிப்படைகள் தீவிர தேடுதல்! சிசிடிவி புகைப்படங்கள் வெளியீடு

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு பள்ளி மாணவர்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரிஷிவந்தியம் அருகே 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மாயம் – சென்னையில் இரண்டு தனிப்படைகள் தீவிர தேடுதல்! சிசிடிவி புகைப்படங்கள் வெளியீடு

மாணவர்களைத் தேடி இரண்டு தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாணவர்கள் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிப் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அரியாந்தக்கா கிராமத்தைச் சேர்ந்த கோகுல் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரும் ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற இருவரும், பள்ளி சீருடை அல்லாத மாற்று உடையில் ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் பணம் எடுத்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற மாணவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், படிப்பில் ஆர்வம் இல்லாததால் சென்னைக்குச் சென்று வேலைக்குச் செல்லப்போவதாக சக மாணவர்களிடம் கூறிவிட்டு இருவரும் சென்றதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், மாணவர்கள் தாங்களாகவே சென்னைக்குச் சென்றார்களா அல்லது வேறு யாரேனும் அவர்களை அழைத்துச் சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், டிஎஸ்பி தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி தலைமையிலான போலீசார் என இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப்படை போலீசார் நேற்று மாலை முதல் சென்னையில் முகாமிட்டு பல்வேறு பகுதிகளில் மாணவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுவர், சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், ரிஷிவந்தியம் அருகே காணாமல் போன இரண்டு பள்ளி மாணவர்களையும் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் – பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்ததாகக் குற்றச்சாட்டு!

MUST READ