நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாயார் சாலையில் புலி ஒன்று கம்பீரமாகச் சாலையைக் கடந்து சென்ற காட்சியைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட மாயார் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளைக் காண சஃபாரி சென்று வருகின்றனர்.
அப்போது யானைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளைக் கண்டு ரசிக்கின்றனர். இந்தச் சாலைகளில் சுற்றுலா வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் சஃபாரி ஜீப்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை மாயார் சாலையில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள், புலி ஒன்று சாலையில் கம்பீரமாக நடந்து வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
சுற்றுலா வாகனம் வருவதைக் கண்டும் எவ்வித அச்சமுமின்றி சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த அரிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
