நத்தம் காவல் நிலையத்தில் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு, முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமணம்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரே சம்பவத்தின் தொடர்ச்சியாக இரண்டு வழக்குகள் பதிவு
இந்தச் சம்பவம் தொடர்பாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த 14 பேர் மீது கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதியும், மேலும் 4 பேர் மீது அக்டோபர் 17-ஆம் தேதியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகளில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தாமல் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வழக்குப்பதிவு செய்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் உயர்மட்ட காவல்துறை அதிகாரி மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
இதனைக் கண்டித்து, BC, MBC, DNT மக்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 22-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நத்தம் காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். வழக்கின் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வர உயர்மட்ட காவல்துறை அதிகாரி மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.
இதுகுறித்து BC, MBC பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். கோமணம்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான வழக்குகளில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
