கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பதிவு செய்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில் உரிய விசாரணை நடத்தாத கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் பரத் லிங்கத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கை வேறு காவல் ஆய்வாளர் விசாரிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அதே காவல் நிலையத்தில் அதே ஆய்வாளர் விசாரணை நடத்தி வருவதாகப் பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வசித்து வருபவர் ஐயப்பன். இவருக்குச் சொந்தமாக அதே பகுதியில் வீடு அமைந்துள்ள எட்டு சென்ட்டுக்கும் அதிகமான நிலம் உள்ளது.
இந்த நிலத்தைத் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடியைச் சேர்ந்த வனஜா, முத்துக்குமார், ராமச்சந்திரன், ஆதிலிங்கம் உள்ளிட்ட ஏழு பேர் போலி ஆவணங்கள் தயாரித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த ஐயப்பன், கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் மோகனகுமாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அங்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் பத்திரத்தைப் பயன்படுத்தி, ஐயப்பனின் வீட்டை இடித்துத் தள்ளியதுடன், அவரையும் அவரது மனைவியையும் சம்பந்தப்பட்ட நபர்கள் தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஐயப்பன் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்திரப்பதிவு மோசடி தொடர்பாக கொட்டாரம் சார்பதிவாளர் மோகனகுமாரும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் அளிக்கப்பட்டு 34 நாட்கள் கடந்தும் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் பரத் லிங்கம் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஐயப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சார்பதிவாளர் அளித்த புகார் மீதும், ஐயப்பன் அளித்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் பரத் லிங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும், காவல் ஆய்வாளர் முதலில் சட்ட ஆலோசனை பெற்றதாகக் கூறியிருந்த நிலையில், பின்னர் இதுவரை சட்ட ஆலோசனை பெறவில்லை என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டுமே திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்த முரண்பாடான வாக்குமூலத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதனால், அவர் தனது அதிகாரப்பூர்வப் பணிகளை எவ்வாறு மேற்கொண்டு வருகிறார் என்பது குறித்து கடுமையான சந்தேகம் எழுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதனைத் தொடர்ந்து, 05.10.2026 அன்று சார்பதிவாளர் அனுப்பிய புகாரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் வேறு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்து, அவர் சட்டப்படி தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் பரத் லிங்கம் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய துறைரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடந்த 11ஆம் தேதிக்குப் பிறகும் ஆய்வாளர் பரத் லிங்கம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, நீதிமன்ற உத்தரவின்படி வேறு ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய விசாரணை, பரத் லிங்கம் பணிபுரியும் கன்னியாகுமரி காவல் நிலையத்திலேயே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஐயப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி ஐயப்பன் கடந்த முன்தினம் கன்னியாகுமரி டிஎஸ்பியிடம் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி வேறு காவல் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் மீதும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சார்பதிவாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த மோசடியில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும் என ஐயப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றம் வேறு ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், அதே காவல் நிலையத்தில் விசாரணை தொடர்வதாக எழுந்துள்ள புகார் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணியில் கந்துவட்டி கொடுமையால் வியாபாரி தீக்குளித்து தற்கொலை – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
