Homeசெய்திகள்மாவட்டம்முல்லைப் பெரியாறு பாசன நீர் கோரி விவசாயிகள் போராட்டம் – ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கடைகளை...

முல்லைப் பெரியாறு பாசன நீர் கோரி விவசாயிகள் போராட்டம் – ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முல்லைப் பெரியாறு அணையின் ஒருபோக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, உறங்கான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.முல்லைப் பெரியாறு பாசன நீர் கோரி விவசாயிகள் போராட்டம் – ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்!

இதன் மூலம் விவசாயிகளுக்கு வணிகர்களும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையின் ஒருபோக பாசனப் பகுதியாக உள்ள மேலூர் தாலுகாவில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், நடப்பாண்டில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் மேலூர் ஒருபோக பாசனத்திற்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளந்திரி வரையிலான இருபோக பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேலூர் ஒருபோக பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் கடைமடைப் பகுதியான மேலூர் ஒருபோக பாசனத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பென்னிகுயிக் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சங்கத் தலைவர் குறிஞ்சிகுமரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெள்ளலூர், உறங்கான்பட்டி, கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணிகர்கள் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாசன நீர் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகளுடன் வணிகர்களும் கைகோர்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நாகையில் விவசாயிகள் நூதனப் போராட்டம் – கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை!

MUST READ