Homeசெய்திகள்மாவட்டம்கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை – அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு; படகு சவாரி ரத்து! சாலைகளில் ஆறாக...

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை – அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு; படகு சவாரி ரத்து! சாலைகளில் ஆறாக ஓடிய மழைநீர்!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம், சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நட்சத்திர ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து உபரிநீர் வெளியேறியதால் படகு சவாரி சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டது. மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

20 நாட்களுக்குப் பிறகு பெய்த கனமழை

கொடைக்கானல் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாமல் பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரங்களில் பனிப்பொழிவும் நிலவி வந்தது.

இந்த நிலையில், நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 10 மணி அளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, தொடர்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை மாலை 5 மணி வரை இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது.

இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும், நட்சத்திர ஏரி பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

நட்சத்திர ஏரியில் உபரிநீர் வெளியேற்றம் – படகு சவாரி ரத்து

கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பி உபரிநீர் வெளியேறியது.

இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் நடைபெற்று வந்த படகு சவாரி சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டது. கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்களது தங்கும் அறைகளிலேயே முடங்கினர்.

இருப்பினும், கேரள மாநிலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வந்திருந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டனர்.

மலைப்பாதையில் ஆறாக ஓடிய வெள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி

கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைப்பாதையில் செண்பகனூர் அருகே அமைந்துள்ள தரைப்பாலத்தின் கீழ்பகுதியில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் மழைநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதுடன், சாலையும் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து தகவலறிந்த பேத்துப்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று, பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்ட கழிவுகள்

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாலத்தின் கீழ்பகுதியில் அடைத்துக் கிடந்த கழிவுகளை சுமார் 5 மணி நேரம் போராடி அகற்றினர்.

அப்போது அங்கு இறந்து கிடந்த மாட்டின் உடலும் தண்ணீரிலிருந்து அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்வாயில் மழைநீர் தடையின்றி வெளியேறத் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது.

இதற்கிடையே, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதியில் 39 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் திடீரென பெய்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு, ஏரியில் உபரிநீர் வெளியேற்றம் மற்றும் மலைப்பாதைகளில் போக்குவரத்து பாதிப்பு என ஒரே நாளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வண்டலூர் அருகே கீரப்பாக்கம் ஹவுசிங் போர்டில் சுகாதாரச் சீர்கேடு: எங்கு பார்த்தாலும் மாட்டுச்சாணம், சேறும் சகதியுமாக சாலைகள் – தொற்றுநோய் பரவும் அபாயம்!

MUST READ