திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, காவல்துறையின் தடையை மீறி திருப்பூரில் பேரணி நடத்த முயன்ற இடதுசாரி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் ‘மத நல்லிணக்கம் – மக்கள் ஒற்றுமைப் பேரணி’ நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய அமைப்புகள் இணைந்து, குமரன் நினைவகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலை வரை பேரணியாகச் செல்லத் திட்டமிட்டிருந்தன. ஆனால், இந்தப் பேரணிக்கு காவல்துறை ஏற்கனவே அனுமதி மறுத்திருந்தது.
இந்நிலையில், தடையை மீறி குமரன் நினைவகம் முன்பு திரண்ட இடதுசாரி கட்சியினர், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகப் புறப்பட்டனர். அவர்களைத் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாகத் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளும் நிகழ்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில் நிலையம் முன்பாகச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற ஏற்பாடு – சிஆர்பிஎப் பாதுகாப்பில் பொதுமக்கள்!
