ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டலக் கண்காணிப்பாளர் ராஜா ராம் ஐ.பி.எஸ். மீது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகளுக்குக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் அரசு நலத்திட்ட நிதிகள் முறையாகச் செலவிடப்படாமல், பேரூராட்சித் தலைவரின் விருப்பப்படி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பொய்யான வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் கலந்தர் ஆசிக் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பெண்களான பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகளவில் இருப்பதே இந்த ஊழல்களுக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் இணை இயக்குனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தார்.
முன்னதாக இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 செயல் அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாததைக் கண்டித்து தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிபதி புகழேந்தி கடும் கேள்வி – இவ்வழக்கு நீதிபதி புகழேந்தி அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எழுப்பிய அதிருப்திக் கேள்விகள் வருமாறு “நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவில்லை? இது போன்ற வழக்குகளில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தாலே முறைகேடுகள் முழுமையாகத் தடுக்கப்படும்.”

“அரசு அதிகாரிகள் மீதான விசாரணையின் போது, ‘சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி வாங்க வேண்டும்’ என்று கூறி ஒவ்வொரு முறையும் விசாரணையைத் தாமதப்படுத்துகிறீர்கள்; இதனால் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலையைச் செய்கிறீர்கள்?”
வாட்ஸ்அப் புகார் திட்டம் குறித்து விமர்சனம் லஞ்சத்தை ஒழிப்பதற்காக அரசு சார்பில் வாட்ஸ்அப் (WhatsApp) எண் அறிமுகப்படுத்தப்பட்டு, லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதி, “நீதிமன்றம் உத்தரவிட்டே முறையான நடவடிக்கை எடுக்கவில்லை; வாட்ஸ்அப்பில் புகார் வந்துவிட்டால் மட்டும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? மக்களை ஏமாற்ற வேண்டாம்” என மிகக் கடுமையாகக் கருத்துத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தொண்டி பேரூராட்சி முறைகேடு வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவுபடி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கலும் எதிர்கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்களும்!
