நீட் (NEET) தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் 1 மணி நேரத்திற்கு மேலாக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திரண்டனர். வகுப்புகளை முற்றிலுமாகப் புறக்கணித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், நீட் தேர்வு முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எவ்விதக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினர்.
கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்
போராட்டத்தின் போது மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“நீட் தேர்வினால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவ-மாணவிகளின் மருத்துவக் கனவு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் முறைகேடுகளால் அம்பலப்பட்டு நிற்கும் நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரத்திற்கு முழுப் பொறுப்பேற்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். டெல்லியில் அமைதியான முறையில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.”
காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு
சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மதுரை மாநகர வடக்கு துணை ஆணையாளர் கார்த்திக் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காகச் சட்டக் கல்லூரி வளாகத்தில் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் இந்தப் போராட்டம் காரணமாக மதுரை சட்டக் கல்லூரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
