Homeசெய்திகள்மாவட்டம்தூத்துக்குடியில் லாக்-அப் மரணம்? தென்பாகம் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு; உடலை வாங்க மறுத்துப்...

தூத்துக்குடியில் லாக்-அப் மரணம்? தென்பாகம் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு; உடலை வாங்க மறுத்துப் போராட்டம்!

-

- Advertisement -

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது வாலிபர், மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அடித்துக் கொன்றதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி

we-r-hiring

சம்பவத்தின் பின்னணி

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் அருணாச்சலம் (26). இவர் தூத்துக்குடி 3-ஆவது மைல் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி மதுபானக் கடை மூடிய பின்பு, சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக அருணாச்சலத்தைத் தென்பாகம் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 120 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை விசாரணைக்காகத் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம், அன்றைய தினம் (ஜூலை 17) மாலையே தலை மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தென்பாகம் காவல்துறையினரால் சேர்க்கப்பட்டார். அதன் பின்னரே, அவரது தாய் பரமேஸ்வரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம், சிகிச்சை பலனின்றி இன்று காலை (ஜூலை 23) பரிதாபமாக உயிரிழந்தார்.

4 காவலர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

அருணாச்சலத்தின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். “விசாரணைக்கு அழைத்துச் சென்ற 4 காவலர்கள் அருணாச்சலத்தைக் கொடூரமாகத் தாக்கியதால்தான் அவரது தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட 4 காவலர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவரை அருணாச்சலத்தின் உடலை வாங்க மாட்டோம்” எனக் கூறி உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி சுனில் தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அருணாச்சலத்தின் தாயார் பரமேஸ்வரி மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குச் சென்ற வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

MUST READ