கந்துவட்டிப் பணத்தைக் கேட்டு அடாவடியில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் மதுரை புதுமண்டபம் கடையில் பணிபுரிந்து வந்த பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சம்பவத்தின் பின்னணி:
மதுரை மாநகர் செல்லூர் அருகேயுள்ள கீழ் அண்ணா தோப்பைச் சேர்ந்தவர் ராஜாராம் (55). இவரது மனைவி பிரேமா, மதுரை புதுமண்டபம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது மகளின் திருமணத்திற்காகத் தோழி கலை என்பவரிடம் 4 சதவீத வட்டிக்கு ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ. 1.50 லட்சத்தை பிரேமா திருப்பிச் செலுத்திவிட்டார்.
கடந்த 4 மாதங்களாக உடல்நலக்குறைவால் பிரேமா வேலைக்குச் செல்ல முடியாத சூழலில், மீதமுள்ள ரூ. 50 ஆயிரத்திற்கு வட்டி கேட்டு கலை தொந்தரவு செய்துள்ளார்.
பின்னர் கலையே, தனக்குத் தெரிந்த பகவதி மற்றும் அங்காளம்மம்மாளிடம் 50 ஆயிரம் ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கி பிரேமாவின் பழைய கடனில் கழித்துள்ளார்.
அந்தப் பணத்திற்கு வட்டி கேட்டு பகவதியும் அங்காளம்மம்மாளும் நெருக்குதல் தரவே, கலை மூலமாகவே திருப்பதி என்பவரிடம் 4 சதவீத வட்டிக்கு மேலும் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி முந்தைய கடன் அடைக்கப்பட்டுள்ளது.
கடைக்கே சென்று தகராறு:
2 லட்சம் ரூபாய்க்கு வட்டி செலுத்த முடியாமல் பிரேமா தவித்த நிலையில், அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்ற திருப்பதி, “நான் 10 சதவீத வட்டிக்குத்தான் பணம் கொடுத்தேன், நீ 4 சதவீத வட்டிதான் தருகிறாய்” என்று கூறித் தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து கலையிடம் முறையிட்டபோது; கலை, பகவதி, அங்காளம்மம்மாள் மற்றும் திருப்பதி ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து பிரேமா வேலை செய்யும் இடத்திற்கே சென்று அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா, கடந்த ஜூலை 13-ஆம் தேதி மாலை கடைக்கு அருகே பூச்சி மருந்து வாங்கி வந்து குடித்துள்ளார். உயிருக்குப் போராடிய அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனை முன் போராட்டம் & வழக்குப்பதிவு:
பிரேமாவின் உயிரிழப்பைக் கண்டித்தும், கந்துவட்டி கும்பலை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விளக்குத்தூண் காவல் நிலையப் போலீஸார் கலை, பகவதி, அங்காளம்மம்மாள், திருப்பதி ஆகியோரின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் ஆதங்கம்:
“குற்றவாளிகளை இன்று இரவுக்குள் கைது செய்வதாகக் காவல்துறையினர் அளித்த உறுதிமொழியின் பேரில் உடலைப் பெற்றுக்கொண்டோம். என் குடும்பத்திற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது”
— பிரேமாவின் கணவர் ராஜாராம் கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும், “மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கந்துவட்டிப் பிசினஸ் அதிகளவில் நடக்கிறது. இந்த அச்சுறுத்தலைத் தடுக்க முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பிரேமாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
