Homeசெய்திகள்மாவட்டம்சோழவந்தான் அரசு பணிமனை அலட்சியம்: பணியாளர்கள் பற்றாக்குறையால் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முடக்கம் - பயணிகள்...

சோழவந்தான் அரசு பணிமனை அலட்சியம்: பணியாளர்கள் பற்றாக்குறையால் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முடக்கம் – பயணிகள் கடும் அவதி!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் நிலவும் கடும் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்து நிலையத்திலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தினசரி வேலைக்குச் செல்வோரும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சோழவந்தான் அரசு பணிமனை அலட்சியம்: பணியாளர்கள் பற்றாக்குறையால் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முடக்கம் - பயணிகள் கடும் அவதி!

இயக்கப்படும் வழித்தடங்கள்:
சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து பெரியார், மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையங்கள் மற்றும் திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு அரசுப் பேருந்துகளே முக்கியப் போக்குவரத்து வசதியாக விளங்கி வருகின்றன.

we-r-hiring

பணியாளர்கள் பற்றாக்குறையும் புதிய நடைமுறையும்:
இந்நிலையில், புதிய நடைமுறை மாற்றம் மற்றும் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, சோழவந்தான் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளன.

முன்பெல்லாம் மதிய ஷிப்ட் மாறும் போது, பணியாளர்கள் பணிமனைக்குச் சென்று அங்கிருந்து பேருந்துகளை எடுத்து வந்து இயக்குவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது, ஷிப்ட் முடிந்து செல்லும் பணியாளர்கள் பேருந்துகளைப் பணிமனைக்குக் கொண்டு செல்லாமல், பேருந்து நிலையத்திலேயே நிறுத்திவிட்டுச் செல்லுமாறு அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெளியேயும் நிறுத்தப்படும் பேருந்துகள்:
இதன் காரணமாக, மதிய வேளைக்குப் பிறகு பேருந்துகளை இயக்குவதற்கு உரிய ஆட்கள் இன்றி, பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்திலேயே நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்குள் இடமில்லாததால், அவற்றில் சில பேருந்துகள் வெளியேயும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாலும் தங்களது சொந்த ஊருக்குப் பாதுகாப்பாகச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு, இந்தத் திடீர் போக்குவரத்து முடக்கம் பெரும் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கை:பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, பணியாளர் பற்றாக்குறை சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளைத் தகுந்த நேரத்திற்கு இயக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்களும் பயணிகளும் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

MUST READ