மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான், வாலாந்தூர் மற்றும் வள்ளல்நதி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் (Express Trains) நின்று செல்ல வழிவகை செய்யக் கோரி, தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு மதுரை கோட்டம் அதிகாரப்பூர்வப் பரிந்துரையை அனுப்பியுள்ளது.
சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தினசரி பயணங்களுக்கு ரயில்களையே நம்பி உள்ளனர். இப்பகுதி அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட போதிலும், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பல முக்கிய விரைவு ரயில்கள் இந்த நிலையங்களில் நிற்காமல் செல்வது தொடர்கிறது. இதனால், பயணிகள் கூடுதல் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து மதுரை அல்லது கொடைரோடு ரயில் நிலையங்களுக்குச் சென்று ரயில்களைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 முக்கிய ரயில்கள்
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சோழவந்தான் ரயில் நிலையத்தில் பின்வரும் விரைவு ரயில்களை நிறுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:
- திருவனந்தபுரம் – இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
- மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்
- சென்னை எழும்பூர் – மதுரை (பாண்டியன்) எக்ஸ்பிரஸ்
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை எதிரொலி: ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கோப்பு!
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,”ரயில்கள் எந்தெந்த நிலையங்களில் நிற்க வேண்டும் என்பதை இறுதி செய்யும் அதிகாரம் ரயில்வே வாரியத்திற்கே (Railway Board) உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை கோட்டம் அனுப்பியுள்ள இந்தப் பரிந்துரை, தற்போது தெற்கு ரயில்வே தலைமையகம் வழியாக ரயில்வே வாரியத்தின் தீவிர பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தனர். ரயில்வே வாரியத்திடமிருந்து முறைப்படி ஒப்புதல் கிடைத்தவுடன், சோழவந்தானில் இந்த ரயில்களுக்கான நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய வழக்கறிஞர்கள்: பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
