மனவளர்ச்சிக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 30 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் ஓடி கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார் ராணிப்பேட்டையைச் சேர்ந்த 35 வயது ஒற்றைத் தாய் பூங்கோதை.


ராணிப்பேட்டை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த பூங்கோதை, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தனது 10 வயது மகன் தருணைத் தனியாக வளர்த்து வருகிறார். தருண் மனவளர்ச்சிக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக் குழந்தை ஆவார்.
குடும்பச் சூழல் காரணமாக மகனுடன் தனித்து வாழ்ந்து வரும் பூங்கோதை, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கையுடன் குழந்தையை வளர்த்து வருகிறார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 450 கி.மீ. ஓட்டம்!
தன்னைப் போன்ற குழந்தைகளின் பெற்றோருக்கும், மனவளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கும் ஆதரவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பிடிக்க பூங்கோதை திட்டமிட்டார்.
அதன்படி, தொடர்ந்து 30 நாட்கள் தினமும் 15 கிலோமீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் ஸ்பிரிண்ட் ஓட்டம் எனத் திட்டமிட்டு தனது முயற்சியை மேற்கொண்டார். இதன் மூலம் மொத்தம் 450 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தனது இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
சாதனையை குழந்தைகளின் நலனுக்காக அர்ப்பணிப்பு!
இந்த முயற்சியின் மூலம் கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ள பூங்கோதை, தனது சாதனையின் அங்கீகாரத்தை மனவளர்ச்சிக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்காக அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பொதுமக்கள் முன்வந்து உதவ வேண்டும் என்றும், அக்குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
தனது வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், மனம் தளராமல் மகனுக்காகவும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் நலனுக்காகவும் 30 நாட்களில் 450 கிலோமீட்டர் ஓடி சாதனை படைத்த பூங்கோதையின் முயற்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
