பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை – பெற்றோர் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் இரண்டு மாணவிகள் திடீரென காணாமல் போன சம்பவம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த பூஜா (16) என்ற மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகும் வீட்டிற்குத் திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினர்.
தோழி மாணவியும் மாயமானது தெரியவந்தது!
இதற்கிடையே, பூஜாவுடன் அதே வகுப்பில் படிக்கும் சின்னவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த லிவாஸ்ரீ என்ற மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர்.
அப்போது தனது மகளும் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடமிருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மகள் வீட்டில் இருந்த செல்போனை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் ஒரே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் இரண்டு மாணவிகளும் காணாமல் போனது தெரியவந்தது.
பேரணாம்பட்டு போலீசார் தீவிர விசாரணை!
இரண்டு மாணவிகளையும் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகளில் ஒருவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் செல்போனின் பதிவுகளை ஆய்வு செய்து, இருவரும் எங்கு சென்றார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து மாணவிகள் மாயம் – பெற்றோர் அதிர்ச்சி!
ஏற்கனவே செஞ்சி அருகே சிறுமி ஒருவர் காணாமல் போய் சுமார் 20 நாட்களாகத் தேடப்பட்டு வரும் நிலையில், தற்போது பேரணாம்பட்டில் ஒரே பள்ளியில் படிக்கும் இரண்டு பிளஸ்-1 மாணவிகள் மாயமாகியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாணவிகளையும் விரைவாக மீட்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை வாடிப்பட்டி, பகுதிகளில் முதன்முறையாகக் குத்துச்செடி மிளகு சாகுபடி விழிப்புணர்வு தொடக்கம்
