Homeசெய்திகள்மாவட்டம்மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின்...

மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர் 

-

- Advertisement -

நகராட்சி அலுவலக முற்றுகையால் பரபரப்பு… ஆணையர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! மதுராந்தகம் நகராட்சியின் பெண் தலைவரின் கணவர், தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் இழிவாகப் பேசியதாகக் கூறி, 70-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிரடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றும் பணி, தனியார் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் 70-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் தினசரிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

 

இந்நிலையில், மதுராந்தகம் நகர்மன்றத் தலைவர் மலர்விழியின் கணவரான குமார் என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தூய்மைப் பணிகளின் ஒப்பந்ததாரரான மனோகர் என்பவரைச் சாதி ரீதியாகவும், ஒருமையிலும் இழிவாகப் பேசி அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர் 

நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்:
நகர்மன்றத் தலைவரின் கணவரின் இந்தச் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள், இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து, குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை:
போராட்டம் குறித்துத் தகவலறிந்த மதுராந்தகம் நகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “புகாருக்கு உள்ளான நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்பூர்வமாக உரிய தீர்வு காணப்படும்” என நகராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.

அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், தங்களது தர்ணா போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்துக் கலைந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக மதுராந்தகம் நகராட்சி அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

பழனியில் பரபரப்பு: ‘தவெக’ நிர்வாகி கைது – அடமானம் வைத்த காரை போலி ஆவணங்கள் மூலம் விற்றதால்– சிறையில் அடைப்பு!

MUST READ