தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரும் வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர்கள் குழுவை நியமிப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கிய விவரங்கள் வருமாறு, “கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மார்ச் 10 அன்று திடீரென மாயமானார். பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அம்மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக விளாத்திகுளத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
போக்சோ நீதிமன்றத்தின் தூக்கு தண்டனைத் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை அதிவேகமாக நடைபெற்றது. மொத்தம் 71 சாட்சிகளிடம் நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தியது. கடந்த மே 25-ஆம் தேதியன்று, வழக்கை விசாரித்த தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா, குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்குத் தூக்கு தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தார். கீழ் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையைச் சட்டப்படி உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்பதால், காவல்துறை தரப்பில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரணை மற்றும் உத்தரவு
இந்த மனு இன்று நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளி தர்ம முனீஸ்வரன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, தங்களது தரப்பில் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தற்போது எஸ்.ஆர். (SR Pending) நிலையில் உள்ளதாகவும் வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டதாவது
”உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மரண தண்டனையை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான வழக்குகளில் நீதிமன்றத்திற்குச் சட்ட ரீதியாக உதவி செய்வதற்காக, ஒரு மூத்த வழக்கறிஞர் தலைமையில் இரண்டு வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில், இலவச சட்ட உதவி மையத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” மேலும், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சட்ட உதவி மையம் சார்பாக வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு (Registrar) நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைக்கு (ஜூலை 15) ஒத்திவைக்கப்பட்டது.
