Homeசெய்திகள்மாவட்டம்மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது தாக்குதலா? தவெக அரசை 'கொடுங்கோன்மை' எனச் சாடிய சீமான்!

மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது தாக்குதலா? தவெக அரசை ‘கொடுங்கோன்மை’ எனச் சாடிய சீமான்!

-

- Advertisement -

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பள்ளி செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான்

இச்சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், தவெக அரசின் இந்த நடவடிக்கை ‘கொடுங்கோன்மை’ என்று ஆக்ரோஷமாக விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு. ​”சின்னஞ்சிறுகைகளைக் காயப்படுத்த எப்படி மனசு வந்தது?” அரியலூர் மாவட்டம், கோடாலி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தை ஒடுக்க முயன்ற காவல்துறை, மாணவிகளின் கையைக் கிழித்து கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்துள்ளது.

we-r-hiring

“ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில், இந்தக் கடை விடுபட்டது எப்படி? பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல்துறைக்கு எப்படி மனசு வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா?”
— சீமான் கேள்வி

​சிங்கப்பெண் படைக்கு எதிராகச் சாடல்:
​பெண்கள் பாதுகாப்பிற்கு என ‘சிங்கப்பெண்கள்’ காவல்படையை உருவாக்கிய தவெக அரசு, இப்போது காவல்துறையிடமிருந்தே மாணவிகளைப் பாதுகாக்க என்ன படையை உருவாக்கப் போகிறது? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கல்வி கற்பதை விட்டுவிட்டு மாணவிகள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளியதே மிகப்பெரிய மனிதப் பேரவலம் என்றும், போராடிய பிறகும் கடையை மூடாமல் போலீஸாரை ஏவித் தாக்கியது கொடுங்கோன்மை என்றும் அவர் சாடியுள்ளார்.

“டாஸ்மாக்கில் விற்பது புனிதத் தீர்த்தமா?”
​கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனிதத் தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த டாஸ்மாக் மது விற்பனையை தவெக அரசும் தொடர்வது வெட்கக்கேடானது என்றார்.
​போதைப்பொருள் ஒழிப்பு நாளில் வெறும் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே போதை ஒழிந்துவிடாது என்றும், சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கும் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவதே போதை ஒழிப்பின் முதற்படி என்றும் அவர் முதலமைச்சருக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

​நாம் தமிழர் கட்சியின் கோரிக்கைகள்:
​கோடாலி கிராமத்தில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய மாணவிகளைத் தாக்கிய காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.
​தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், இத்தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகள் விரைந்து நலம்பெற வேண்டுவதாகவும், அநீதிக்கு எதிராகச் சமூகப் பொறுப்புணர்வோடு தீரத்துடன் போராடிய அரியலூர் மண்ணின் வீரமகள்களுக்குத் தனது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ