சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் அரசு நிறுவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விவரம்:

அம்பேத்கர் சிலையை அகற்றக் கூடாது
இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வரைவு செய்து, தேச விடுதலைப் போராட்ட வீரர்களும் அறிஞர்களும் நிறைந்த அவையில் அதனை முன்மொழிந்து, விரிவான விவாதத்திற்குப் பின் ஒருமனதாக நிறைவேற்றப் பெரும் பங்களிப்பு செய்தவர் பேரறிஞர் அண்ணல் அம்பேத்கர். அவரது கம்பீரமான திருவுருவச் சிலை சேலம் மாவட்டம் ஒதியத்தூரில் அமைக்கப்பட்டிருந்தது.

அரசு நிர்வாகத்தின் நடவடிக்கை வேதனையளிக்கிறது
சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலர், இந்தச் சிலை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளனர். சட்டம் – ஒழுங்கைப் பராமரித்து, சாதி ஆதிக்க சக்திகளை ஒடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அந்தச் சமூக விரோதக் கும்பலுக்குப் பணிந்து அம்பேத்கர் சிலையை அகற்றியிருப்பது வேதனையளிக்கிறது.
குறிப்பிட்ட எல்லைக்குள் அடைப்பது அவமானம்
இந்தியாவின் மிகச் சிறந்த சமூக அறிஞரும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் சலிப்பறியாது போராடியவருமான அண்ணல் அம்பேத்கரை, ஒரு குறிப்பிட்ட சாதி எல்லைக்குள் அடைத்து அடையாளப்படுத்த முயலும் செயல் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானமாகும்.
கட்சியின் கோரிக்கை:
இந்த மாபெரும் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு சில சமூக விரோதிகளைத் தவிர்த்து, ஒட்டுமொத்த சமூகமும் ஏற்றுக்கொண்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். எனவே, அகற்றப்பட்ட அவரது திருவுருவச் சிலையை மீண்டும் அதே இடத்தில் அரசு அமைத்துத் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைச் சினேகத்தோடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
