திருச்சி மாநகரப் பகுதியில் போதை ஊசிப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடுத்தடுத்து பலியாகி வரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசியால் நிகழும் 3-வது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (20). இந்த வாலிபர் நேற்று இரவு தனது உடலில் போதை ஊசி செலுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்த புத்தூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சஞ்சய்யின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சஞ்சய் நேற்றிரவு போதை ஊசி செலுத்தியதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியானாலும், அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா அல்லது போதை மருந்து அளவு அதிகமானதால் (Overdose) உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் போதை ஊசிப் பழக்கத்தால் கடந்த 40 நாட்களில் நடக்கும் 3-வது மரணம் இதுவாகும். ஏற்கனவே கடந்த ஜூன் 8-ஆம் தேதி இளம்பெண் ஒருவரும், ஜூன் 30-ஆம் தேதி வாலிபர் ஒருவரும் இதே போதை ஊசிப் பழக்கத்தால் உயிரிழந்துள்ளனர். தற்போது 20 வயது இளைஞர் சஞ்சய்யும் பலியாகியிருப்பது திருச்சியில் போதை கலாச்சாரம் எந்தளவுக்குப் பரவியுள்ளது என்பதைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்சியில் சட்டவிரோதமாகப் போதை மருந்துகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்யும் கும்பலைக் பிடிக்கப் போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அரியலூரில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
