கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களுக்குச் சொந்தமான சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்குப் பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மற்றும் குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் ஆகிய கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் சுமார் 15 கிராமங்களில் அமைந்துள்ளன. இந்த நிலங்கள் தொடர்பாக 3,390 தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டிருந்ததால், அவற்றுக்கான பத்திரப்பதிவிற்கு இந்து சமய அறநிலையத்துறை முன்பு தடை விதித்திருந்தது. ஆனால், சமீபத்தில் இந்த 15 கிராமங்களில் உள்ள சுமார் 3,085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கம் செய்யலாம் என தமிழக அரசு தரப்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் அவசர முறையீடு
தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த விவகாரத்தை அவசர வழக்காக எடுத்து உடனே விசாரணை நடத்த வேண்டும் என்றும் சேலத்தைச் சேர்ந்த ‘திருத்தொண்டர்கள் அறக்கட்டளை’யின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார். உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது, “கோவில் நிலங்களை இன்று பட்டாக்கள் செய்வதற்கான முகாந்திரம் உள்ளது. எனவே, சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்த வழக்கை இன்றே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
நீதிபதிகள் உத்தரவு
மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடைமுறைகளின்படி வழக்கை முறையாகத் தாக்கல் செய்தால், அதனை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவிட்டது. தமிழக அரசின் தடையை நீக்கும் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்படவுள்ள இந்த வழக்கு, நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால் ஆன்மீகப் பெருமக்கள் மற்றும் நில உரிமைதாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
