திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள், டாஸ்மாக் கடைக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டு, கடையை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதை ஆசாமிகளின் அட்டகாசம் – பொதுமக்கள் அவதி
மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில், பிரதான சாலையான மணப்பாறை – கோவில்பட்டி சாலை ஓரத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் போதை ஆசாமிகளின் ரகளையால் கடும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுமட்டுமின்றி, குடிகாரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும், அப்பகுதி மக்கள் வளர்க்கும் ஆடுகளைப் போதையில் திருடிச் செல்வதும் வாடிக்கையாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் வழிபாட்டுத் தளம் மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பைக் கருதி இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வட்டாட்சியர் கொடுத்த வாக்குறுதி என்ன?
இதனைக் கண்டித்து கடந்த மே 30-ஆம் தேதி பொதுமக்கள் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள், “இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த டாஸ்மாக் கடையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பொதுமக்களிடம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.
கடையைப் பூட்டி பெண்கள் அதிரடிப் போராட்டம்!
அதிகாரிகள் கெடு விதித்த ஒரு மாத காலம் முடிந்தும், மதுக்கடையை அகற்றுவதற்கான எந்தவொரு பூர்வாங்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த எப்.கீழையூர் ஊராட்சி மற்றும் பொய்யாமணி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை மேட்டுக்கடை டாஸ்மாக் கடைக்குத் திரண்டு வந்தனர்.
அவர்கள் கடையைத் திறக்க விடாமல், டாஸ்மாக் கடையின் கதவுகளுக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டனர். பின்னர், கடைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை (Placards) கையில் ஏந்தியபடி, கடையின் முன்பாக அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
போலீசாருடன் வாக்குவாதம் – பரபரப்பு
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், போராட்டக் களத்தில் பொதுமக்கள் நிழலுக்காகப் பந்தல் அமைத்திருந்தனர். ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்தப் பந்தலை அகற்றக் கோரியதால், பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் பந்தலை அகற்றிக் கொண்ட போதிலும், வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையிலேயே அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், “அதிகாரிகள் ஏற்கனவே தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டனர். எனவே, இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடும் வரை எங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை” எனப் பெண்கள் உறுதியுடன் தெரிவித்து விட்டனர்.
மதுக்கடையை மூடக்கோரி கிராமப் பெண்களும், மாணவர்களும் இணைந்து நடத்தி வரும் இந்தத் தொடர் முற்றுகைப் போராட்டம் மணப்பாறை வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
