Homeசெய்திகள்மாவட்டம்"கரூரில் ₹25,000 கோடி கோயில் நிலம் பட்டா மாற்றம்: முதல்வர் விஜய்யின் சுயநல அரசியல்!" –...

“கரூரில் ₹25,000 கோடி கோயில் நிலம் பட்டா மாற்றம்: முதல்வர் விஜய்யின் சுயநல அரசியல்!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

கரூரில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட 4 கோயில்களுக்குச் சொந்தமான ₹25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள் அவசர அவசரமாகத் தனியாருக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக விவசாயிகள் அணி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார். அவரது பேட்டியின் விரிவான விவரங்கள் வருமாறு:

நயினார் நாகேந்திரன்

we-r-hiring

ஒரே நாளில் அரசாணை – மாபெரும் நில மோசடி:
​தமிழகத்தில் தற்போதைய அரசு மிகப்பெரிய மோசடி வேலையை அரங்கேற்றி வருகிறது என்று சாடிய நயினார் நாகேந்திரன், “கரூரில் உள்ள பழமைவாய்ந்த கோயில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் அறநிலையத்துறை நிலங்கள் தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் சந்தை மதிப்பு சுமார் ₹25,000 கோடி ஆகும். பொதுமக்கள் ஒரு நிலத்திற்குப் பட்டா வாங்க வேண்டுமென்றால் மாதக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது.

ஆனால், இந்த நிலங்களுக்காகக் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அறநிலையத்துறை இணைய ஆணையர் ஆகியோரிடமிருந்து கடந்த 9-ஆம் தேதி காலையிலேயே பரிந்துரைகள் பெறப்பட்டு, அன்றைய தினமே அரசாணையும் அவசர அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
​இந்து கோயில்களின் இடங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் இது செய்யப்பட்டுள்ளதா? இதற்கு அறநிலையத்துறை அமைச்சரும் உறுதுணையாக இருக்கிறாரா? ஒரே நாளில் இந்த நிலங்களை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதைக் கண்டித்து, கோயில் நிலங்களை மீட்பதற்காகப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

அரசு வேலை விநியோகம் – ஒரு சுயநல அரசியல்:
​கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க முதல்வர் உத்தரவிட்டது குறித்துப் பேசிய அவர்: ​”உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கு முன்னதாக தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள், மின்சாரத் துறை வாரிசுதாரர்கள், போக்குவரத்து, வருவாய் மற்றும் கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் வாரிசுகள் என ஆயிரக்கணக்கானோர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.

அதேபோல், டெட் (TET) மற்றும் குரூப்-1 தேர்வுகளில் கஷ்டப்பட்டு படித்துத் தேர்ச்சி பெற்று வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் வழங்காமல், தனது சொந்தக் கட்சி கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தவர்களுக்கு மட்டும் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்குவது ஒருவகையான சுயநல அரசியல் ஆகும்.”

மாணவர்களைத் தவறான வழியில் கொண்டு செல்லும் முதல்வர்:
​அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சினிமாவில் மட்டுமே பார்த்த இதுபோன்ற சம்பவங்கள் இப்போது நிஜத்தில் நடக்கின்றன. முதல்வர் வரும்போது பள்ளிக்கு விடுமுறை விடுவதும், அரசு பள்ளி மாணவர்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று சாடினார்.

உரப் பதுக்கல் மற்றும் திருமாவளவன் குறித்த விமர்சனம்:
​கோவையில் 20,000 மூட்டை உரங்கள் பதுக்கப்பட்டதாக வரும் செய்திகள் குறித்துப் பேசிய அவர், மத்திய அரசு பெரும் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை வழங்குகிறது என்றும், இதில் மாநில அரசுக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்றும் கூறினார். இது அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து ஆய்வு செய்த பின் விரிவான கருத்துத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசுகையில், “திருமாவளவன் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே உள்ளார். தவெக-விற்குப் போன பிறகு அவருடைய பேச்சுகள் எல்லாம் மாறின, இப்போது மீண்டும் திமுக நட்போடு இருப்போம் என்கிறார். எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஒரே எதிரிக் கட்சி பாரதிய ஜனதா கட்சிதான் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். பாஜக வரக்கூடாது என்ற எண்ணத்தில் எல்லாரும் கூட்டு சேர நினைக்கிறார்கள். மொத்தத்தில் பாரதிய ஜனதா கட்சியைப் பார்த்து அனைத்து கட்சிகளும் பயந்து போயிருக்கின்றன” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

MUST READ