தமிழகத்தில் தவெக ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலோ, லஞ்சமோ இல்லை என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், கடந்த காலங்களில் தமக்கு எதிராகக் கரூரில் நடத்தப்பட்ட அரசியல் சதிக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

மறக்க முடியாத கரூர் வலி – காவல்துறை நாடகம்:
”நான் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் என் வாழ்வில் சில வலிகளை என்றுமே மறக்க முடியாது. எல்லாவற்றையும் விட எனக்கு அதிக வலி தந்தது ‘கரூர் சம்பவம்’ தான். அரியலூர் பயணத்தை முடித்துவிட்டு நான் பெரம்பலூர் சென்றபோது, கூட்டம் அதிகமாக இருக்கிறது எனப் போலீசார் எங்களை எச்சரித்தார்கள். ஆனால், கரூருக்கு வரும்போது அவர்கள் எங்களை முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம் (Alert). காவல்துறை நினைத்திருந்தால் அந்த கூட்டத்தை ரத்து செய்திருக்க முடியும். ஆனால், அதைச் செய்யாமல் எங்களை உள்ளே அழைத்துச் சென்று ஒரு நாடகத்தை நடத்தினார்கள்; நானும் அதை நம்பிவிட்டேன். இதற்கெல்லாம் யார் காரணம், யார் சொல்லி இதையெல்லாம் செய்தார்கள்?”

பழி சுமத்தியவர்களுக்குப் பதிலடி:
“அந்தத் துயரச் சம்பவத்தில் நாம் மழலைச் செல்வங்களை இழந்துள்ளோம். அந்த வலியோடு இருந்த என்னைச் சிலர் ஏளனமாகப் பேசினார்கள்; என் மீதே பழியைச் சுமத்தினார்கள். கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் அன்று முறையான போலீஸ் பாதுகாப்பு இல்லை. மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சட்டமன்றத்தில் அரசியல் செய்தார். நான் மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன். என் மீது பழி போட்டவர்களுக்கு, கடந்த 2026 தேர்தலில் மக்கள் கொடுத்த பதிலடியைப் போல, இனி அவர்களால் காலத்திற்கும் எழ முடியாத அளவிற்குப் பேரிடி கொடுக்க வேண்டும். கரூரில் நமக்கு எதிராக நடத்தப்பட்ட அந்தச் சதியையும், சூழ்ச்சியையும் யாரும் மறக்காத வண்ணம், கரூரில் ஒரு பிரம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” என்றார்.
ஊழலற்ற தவெக ஆட்சி:
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர், “நமது அரசை ‘மாடல் மாடல்’ என்று சிலர் குறை கூறி வருகிறார்கள். ஆனால், அந்தத் தீய சக்தியும், தீந்து போன சக்தியும் ஒவ்வொரு துறையிலும் ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) என்ற பெயரில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். சட்டமன்றத்தில் இதைக் கேள்வி எழுப்பியவுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். ஒவ்வொரு துறையிலும் அவர்கள் செய்த ஊழல்களின் முகமூடிகள் இப்போது கிழிந்து வருகின்றன. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் முறையான பதவி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. எந்தத் துறையிலும் ஊழலோ, லஞ்சமோ கிடையாது. தீய சக்தி என்பது ஓட்டைப் பாத்திரத்திற்குள் தண்ணீர் ஊற்றிய கதையாக மாறியுள்ளது. வரும் நாட்களில் இந்த அரசின் விஸ்வரூபம் உங்களுக்கே தெரியும்” என்று குறிப்பிட்டார்.
’ரியல்’ தாய் மாமனாகத் தங்க மோதிரத் திட்டம்:
விவசாயிகளுக்கு இந்த அரசு எப்போதும் துணையாக இருக்கும் என உறுதியளித்த அவர், புதிய திட்டத்தை அறிவித்தார்: “வருகிற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில், ஏழை எளிய மக்களுக்காக ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கி வைக்கப்படும். சினிமாப் படங்களைப் போல நான் ‘ரீல்’ தாய் மாமன் அல்ல, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ‘ரியல்’ தாய் மாமன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மாநில உரிமைகளில் சமரசம் இல்லை:
காவிரி மற்றும் தொகுதி மறுவரையறை விவகாரங்கள் குறித்தும் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்: “மேகதாது அணை தொடர்பான வழக்கில் ஸ்டாலின் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டாரா என்று நான் கேட்டால்தான், மேகதாது குறித்துப் பேசுகிறேன் என்று அர்த்தமா? அதேபோல், மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) கொண்டு வந்தால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, உறுதியாக எதிர்க்கும். தீய சக்தியும் தீந்து போன சக்தியும் கூட்டுக்களவாணிகளாகச் செயல்படுகிறார்கள்” என முதலமைச்சர் விஜய் தனது உரையில் கடுமையாகச் சாடினார்.
