தமிழகத்தில் கோடை வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வானிலை மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ:
கோவை, நீலகிரியில் இடி-மின்னலுடன் கனமழை: கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜூலை 9), நாளையும் (ஜூலை 10) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த இரு மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 11 முதல் 15 வரை எப்படி இருக்கும்?
ஜூலை 11: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 15 வரை: தமிழகத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக ஜூலை 15ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த சில தினங்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
