குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்கக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் இந்த மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இம்மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு,இலவச குடிமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள்,சாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் நலவாரிய அட்டை, புதிய குடும்ப அட்டை (Ration Card) மற்றும் 100 நாள் வேலைத் திட்ட அட்டை, குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் மயான (சுடுகாடு) வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர் (தாசில்தார்), கோட்டாட்சியர் (ஆர்டிஓ) மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுநாள் வரை எவ்விதச் சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்தே இப்போராட்டம் வெடித்துள்ளது.

மாவட்டம் முழுவதிலும் இருந்து திரண்ட மக்கள்
இன்று நடைபெற்ற போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான ஆர்.கே. பேட்டை, திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தங்களது குடும்பங்களுடன் திரண்டு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்தின் முதன்மை நுழைவாயில் முன்பாகத் திரண்ட அவர்கள், தங்களது வாழ்வாதார உரிமைகளை மறுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பி அதிர வைத்தனர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு – வளாகத்தில் பதற்றம்!
காலை முதல் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் தரையிலேயே அமர்ந்து மக்கள் தங்களது காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் நீடித்துக் கொண்டே சென்றதால் பொறுமையிழந்த மலைவாழ் மக்கள், திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கூட்டமாக நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாகப் போலீசாருக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அப்பகுதியே போர்க்களமாக மாறியது. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து உறுதியளிக்கும் வரை போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை என மலைவாழ் மக்கள் உறுதியாக அமர்ந்துள்ளனர். இச்சம்பவத்தால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்போது வரை பெரும் பரபரப்பும், பதற்றமான சூழலும் நீடித்து வருகிறது.
அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்! அயப்பாக்கத்தை உலுக்கும் தண்ணீர் திருட்டு – மக்கள் தவிப்பு!
