தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து கடந்த ஆண்டு பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்த 35 குடும்பங்களுக்கு பணி ஆணை வழங்குதல் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதையொட்டி, கரூர் மாவட்டத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


நாளைய தினம் திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக கரூர் வரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, கரூர்–சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்றுப் பொதுமக்களைச் சந்திக்கிறார்.
35 குடும்பங்களுக்குப் பணி ஆணை:
மக்கள் சந்திப்பு நிகழ்வைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். இவ்விழாவில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், முதற்கட்டமாக 35 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் நேரில் வழங்குகிறார். அத்துடன், பொதுமக்களுக்குப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் விநியோகிக்க உள்ளார்.

அரண் போல் அமைக்கப்பட்ட இரும்புத் தடுப்புகள்:
கடந்த ஆண்டு பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு, இந்த முறை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முன்னெச்சரிக்கையாகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மக்கள் சந்திப்பு நடைபெறும் தனியார் கல்லூரி மைதானத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், சுமார் 10 அடி உயரத்திற்கு இரும்புத் தகர தடுப்புகள் (Tin Barricades) அமைக்கப்பட்டு மைதானம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் திருச்சி டூ கரூர் சாலை மார்க்கமாகப் பயணிக்கும் வழித்தடங்கள் முழுவதிலும், சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் முண்டியடிப்பதைக் தடுக்கும் வகையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இரும்புத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வரின் வருகையையொட்டி கரூர் மாவட்டமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
