கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதம் மற்றும் மனுவின் விரிவான விபரங்கள் வருமாறு,
அவசர முறையீடும் நீதிமன்றத்தின் கேள்வியும்
வருகிற 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கரூரில் நடைபெறவுள்ள அரசு விழாவில், கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். இந்த நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தரப்பில் இன்று அவசர முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைப் பரிசீலித்த நீதிபதிகள், “இச்சம்பவம் தொடர்பான முக்கிய வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே? அப்படி இருக்கும்போது இந்த கூடுதல் கோரிக்கையையும் நீங்கள் அங்கேயே முறையிடலாமே?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என மறுத்த நீதிபதிகள், “சாதாரண சட்ட நடைமுறையைப் பின்பற்றி, இதனை வழக்கமான மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்; பின்னர் அது முறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று அறிவுறுத்தினர்.

மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் காரணங்கள்
வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளும் சட்ட விளக்கங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை, கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழக அரசியல் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது நாடு முழுவதையும் உலுக்கிய துயரச் சம்பவமாகும். இச்சம்பவம் குறித்து 13.10.2025 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இது “தேசிய மனசாட்சியை உலுக்கிய சம்பவம்” (Shaken the national conscience) எனக் குறிப்பிட்டு, சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் அமைத்துக் கண்காணித்து வருகிறது.
சம்பவத்தின் உண்மை நிலவரம் மற்றும் சட்டப்பூர்வ விளைவுகள் உச்ச நீதிமன்றத்தின் கீழ் நிலுவையில் உள்ள சூழலில், அரசுப் பணி வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கொள்கை மற்றும் சம வாய்ப்புக் கோட்பாட்டிற்கு முரணாக அமையும். தனியார் அல்லது அரசியல் பொதுக்கூட்டங்களில் ஏற்படும் துயரச் சம்பவங்களுக்கு அரசு வேலை வழங்குவது, எதிர்காலத்திலும் இதேபோன்ற கோரிக்கைகள் எழுவதற்கான தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும். இத்தகைய முடிவுகள் அரசின் தெளிவான சட்டக் கொள்கை மற்றும் ஒரே மாதிரியான நடைமுறையின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். எனவே, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள சிபிஐ விசாரணை முடிவடைந்து, நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்குவதை அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு வேலை வழங்கும் விழா இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி முறையிட்ட இச்சம்பவம் பெரும் அரசியல் மற்றும் சட்ட விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜியமான மாணவர் சேர்க்கை – ஆண்டிபட்டியில் 2 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!
