திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்குத் தக்காளியின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை படிப்படியாகக் குறைந்துள்ளது. தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், வேடசந்தூர், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி விவசாயம் மிக அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் தற்போது தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளதால், தினந்தோறும் டன் கணக்கில் தக்காளி அறுவடை செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.

குவியும் தக்காளி பெட்டிகள்
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் புகழ்பெற்ற காந்தி மார்க்கெட்டிற்கு, கடந்த சில நாட்களாகத் தக்காளியின் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு மட்டும் தலா 20 கிலோ எடை கொண்ட சுமார் 3,000 தக்காளி பெட்டிகள் வரை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காகக் குவிந்து வருகின்றன. இந்தத் தொடர் வரத்து அதிகரிப்பால் தக்காளியின் விலை சற்றே சரிவைக் கண்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
மார்க்கெட்டில் கடந்த வாரங்களில் சில்லரை விலையில் ஒரு கிலோ 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையான முதல் ரக தக்காளி, தற்போது 5 ரூபாய் வரை விலை குறைந்து அதன் தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை சில்லரையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சிறிய அளவிலான மூன்றாம் ரக தக்காளி பொதுமக்கள் மற்றும் உணவகங்களின் தேவைகளுக்காக ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மிக மலிவான விலையில் தாராளமாகக் கிடைக்கிறது. ”வரத்து இன்னும் சில நாட்களுக்கு இதேபோல் நீடித்தால் தக்காளியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.” என காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தக்காளியின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், சமையலுக்கு முக்கியத் தேவையான தக்காளிப் பழங்களை இல்லத்தரசிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் நுகர்வோர் மத்தியில் மகிழ்ச்சி நிலவி வருகிறது. இருப்பினும், தக்காளி பயிரிடுவதற்கான உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் அதனை மார்க்கெட்டிற்கு எடுத்து வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றைக் கணக்கிடும்போது, தற்போதைய விற்பனை விலை தங்களுக்குக் கடும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகத் தக்காளி பயிரிட்டுள்ள பாடுபட்ட விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
