Homeசெய்திகள்மாவட்டம்பாம்பு பிடிக்க மறுத்த அதிகாரி - பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!

பாம்பு பிடிக்க மறுத்த அதிகாரி – பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!

-

- Advertisement -

​ “வீட்டில் புகுந்த பாம்பைப் பிடிப்பது எங்கள் வேலை இல்லை, வனத்துறையை அழையுங்கள்” என்று பொதுமக்களிடம் அலட்சியமாகப் பேசிய கடலூர் மாவட்டம் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலரின் ஓராண்டு ஊதிய உயர்வை (Increment) நிறுத்தி வைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாம்பு பிடிக்க மறுத்த அதிகாரி - பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!

we-r-hiring

​கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டிற்குள் எதிர்பாராத விதமாகப் பெரிய பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வநாதன், உடனடியாக பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்து, பாம்பைப் பிடித்துத் தருமாறு உதவி கோரியுள்ளார். ​ஆனால், அப்போது பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலராக (Station Officer) பணியில் இருந்த வேல்முருகன், விஸ்வநாதனின் கோரிக்கையை ஏளனம் செய்யும் வகையில், “பாம்பு பிடிப்பது எல்லாம் எங்கள் வேலை கிடையாது; வனத்துறையைக் கூப்பிடுங்கள்” என அலட்சியமாகப் பதிலளித்து, உதவ மறுத்துள்ளார். ​தீயணைப்புத் துறையினர் வர மறுத்ததால், விஸ்வநாதன் வேறு வழியின்றி ஒரு தனியார் வன ஆர்வலரைத் தேடிப்பிடித்து வரவழைத்து, தனது வீட்டில் இருந்த பாம்பைப் பிடித்து அப்புறப்படுத்தியுள்ளார்.

​அதிகாரியின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த விஸ்வநாதன், வன ஆர்வலர் பாம்பு பிடிக்கும் வீடியோ காட்சிகளையும், தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தன்னிடம் மொபைல் போனில் அலட்சியமாகப் பேசிய ஆடியோ பதிவையும் ஆதாரமாக இணைத்து, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (CM Cell) ஆன்லைன் மூலமாக அதிரடியாகப் புகார் அனுப்பினார். ​முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து வந்த இந்தப் புகாரை ஆய்வு செய்த தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள், இதுகுறித்து விரிவான துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவசரக் காலத்தில் பொதுமக்களுக்கு உதவ மறுத்து, நிலைய அலுவலர் வேல்முருகன் அலட்சியமாகப் பேசியது ஆடியோ ஆதாரங்கள் மூலம் நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டது.

கடமை தவறிப் பொதுமக்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட குற்றத்திற்காக, பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகனின் ஊதிய உயர்வை (Increment) ஓராண்டு காலத்திற்கு நிறுத்தி வைத்து தீயணைப்புத் துறை தலைமை அலுவலகம் தற்போது அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. ​அவசர உதவி என்று அழைக்கும் பொதுமக்களிடம் அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள் மீது, முதலமைச்சர் தனிப்பிரிவு புகாரின் பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை மற்ற அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

வறண்ட மேட்டூர், புதர் மண்டிய வாய்க்கால்கள்: சீர்காழியில் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு ஆபத்து!

MUST READ