சென்னை புறநகர் பகுதியான அயப்பாக்கம் ஊராட்சியில், வரலாறே காணாத வகையில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுவதே இந்த அவலநிலைக்கு முக்கியக் காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.


ஆசியாவிலேயே மிகப்பெரிய குடியிருப்புப் பகுதியான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு (TNHB) இந்த அயப்பாக்கம் ஊராட்சியில்தான் அமைந்துள்ளது. ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இங்கு உள்ளன. இந்த ஊராட்சியைச் சுற்றி: அம்பத்தூர் ஏரி, அயப்பாக்கம் ஏரி மற்றும் ஏராளமான குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் சூழ்ந்துள்ளன.
நீர் வளம் மிக்க இப்பகுதியிலிருந்துதான், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் வணிக வளாகங்களுக்குத் தினசரி தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கோடைக்காலம் முடிந்துள்ள நிலையிலும், அயப்பாக்கம் ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக வறண்டுபோய் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.
காரணம் என்ன?
அயப்பாக்கம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில், தனியார் நில உரிமையாளர்கள் சட்டவிரோதமாக 500 அடி முதல் 800 அடி வரை ஆழ்துளைக் கிணறுகளை (Borewells) அமைத்துள்ளனர். அங்கு ராட்சத மோட்டார்களைப் பொருத்தி, நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் நிலத்தடி நீரைச் சுரண்டி, சென்னை நகருக்குள் கடத்தி விற்று லாபம் பார்த்து வருகின்றனர்.
இதன் விளைவாக, பல ஆண்டுகளாக வற்றாத குட்டைகளும், குளங்களும் தற்போது முழுவதுமாக வறண்டு, கழுகுப்பார்வையில் (Drone View) பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. அன்றாடத் தேவைக்கு வழியின்றி தவிக்கும் பொதுமக்கள் தனியாரின் இந்த அப்பட்டமான தண்ணீர் திருட்டால், அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது.
இப்பகுதியில் உள்ள பல நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் வீடுகளில் சொந்தமாக கிணறுகளோ, ஆழ்துளைக் கிணறுகளோ இல்லை.
அவர்கள் முழுமையாக ஊராட்சி விநியோகிக்கும் நீரையே நம்பியிருந்தனர். தற்போது பொதுக் குழாய்களிலும் தண்ணீர் வராததால், குளிப்பதற்கும், சமைப்பதற்கும் கூடத் தண்ணீரின்றி மக்கள் குடங்களுடன் அலைந்து திரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேசும்போது,
”எங்கள் ஊராட்சியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு போய் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. முதல் முறையாக இப்போதுதான் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையைச் சந்திக்கிறோம். இதற்கு முழுக்க முழுக்கத் தண்ணீர் திருட்டுதான் காரணம்.” இந்தச் சட்டவிரோதத் தண்ணீர் கடத்தல் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இனியும் தாமதிக்காமல், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு:
தனியார் நிலங்களில் உள்ள சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து சீல் வைக்க வேண்டும். ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்து, தண்ணீர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அயப்பாக்கம் பொதுமக்களின் குடிநீர் தேவையைத் தீர்க்க உடனடி மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இயற்கை அன்னை தந்த கொடையான நிலத்தடி நீரை, ஒருசிலரின் சுயநல லாபத்திற்காகச் சுரண்ட அனுமதித்தால், எதிர்காலத்தில் அயப்பாக்கம் குடியிருப்புப் பகுதியே வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்
