Homeசெய்திகள்ஆவடிஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடை எப்போது மூடப்படும்? - தவெக அரசின் மூடல் பட்டியலில்...

ஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடை எப்போது மூடப்படும்? – தவெக அரசின் மூடல் பட்டியலில் விடுபட்டதால் மக்கள் வேதனை!

-

- Advertisement -

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்கள் அருகில் இயங்கி வரும் 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், மாணவிகள் மற்றும் பெண்கள் புழங்கும் ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை இந்த மூடல் பட்டியலில் சேர்க்கப்படாதது பொதுமக்களிடையே பெரும் வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி, டாஸ்மாக்,

பொதுமக்களுக்கு தொடரும் இடையூறு
​சென்னையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் ரயில் தடத்தில் மிக முக்கிய ரயில் நிலையமாக ஆவடி விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்தை ஒட்டியே பேருந்து நிலையம், பஜார் சாலை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் அமைந்துள்ளன.
​இங்கு ரயில் நிலையம் அருகிலேயே அரசு மதுபானக் கடையும், பாரும் இயங்கி வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், வேலை முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் பெண்கள் பெரும் அச்சத்துடனேயே இப்பகுதியைக் கடந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

we-r-hiring

ரயில் பயணிகளுக்கு தொல்லை
​மதுப்பிரியர்கள் பகல், இரவு பாராமல் மதுவை குடித்துவிட்டு, சாலையோரங்களிலேயே அமர்ந்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர். மேலும், அதிகளவில் போதையேறிய நபர்கள் ஆவடி ரயில் நிலையப் பிளாட்பாரங்களிலேயே படுத்து உறங்குவதால், ரயிலுக்காகக் காத்திருக்கும் பெண் பயணிகள் மற்றும் குடும்பத்துடன் வரும் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

காவல்துறை மீது மக்கள் குற்றச்சாட்டு
​”மதுபானக் கடைக்கு மிக அருகிலேயே காவல் நிலையம் இருந்தும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, காவல்துறையினர் மதுபானக் கடைக்கும் பாருக்கும் பாதுகாப்பு அளிப்பதிலேயே உறுதியாக இருக்கிறார்கள். ஆவடி காவல்துறையின் முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடனேயே இந்த கடை விதிகளை மீறி இயங்கி வருகிறது” என அப்பகுதி மக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தின் மௌனம்
​இந்த மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி ஆவடி பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பலமுறை புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
​தவெக அரசு அறிவித்த 717 கடைகள் மூடல் பட்டியலில், ஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடையையும் இணைத்து அதனை உடனடியாக மூட அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆவடி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

MUST READ