Homeசெய்திகள்ஆவடி"கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தால்தான் இந்த நிலை": ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த விவகாரத்தில்...

“கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தால்தான் இந்த நிலை”: ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த விவகாரத்தில் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

-

- Advertisement -

ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீமை விளைவிக்கும் உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 4 பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

ஆவடி

we-r-hiring

உணவில் பல்லி: அதிர்ச்சியில் பணியாளர்கள்

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பசுமை பூங்கா பகுதியில் வழக்கம் போல் தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட இந்த உணவில், இட்லிக்கான சாம்பாரில் பல்லி ஒன்று செத்துக்கிடந்தது தெரியவந்துள்ளது.

இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சில பணியாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே, மற்றவர்களுக்கும் அச்சம் எழுந்தது. இதனையடுத்து, சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிரக் கண்காணிப்புடன் கூடிய சிகிச்சைகளையும் பரிசோதனைகளையும் அளித்து வருகின்றனர்.

ஆவடி மாநகராட்சியில் தூய்மைப் பணியில் மொத்தம் 817 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ‘பாலாஜி குளோபல்’ என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சிப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு, பூச்சி மற்றும் இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் நிகழ்வது தொடர்கதையாகி வருவதாகவும், உணவுத் தயாரிப்பில் ஒப்பந்த நிறுவனங்கள் தரக் கட்டுப்பாட்டைப் பேணத் தவறுவதே இதுபோன்ற விபரீதங்களுக்குக் காரணம் என்றும் பணியாளர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளின் நேரில் ஆய்வு

சம்பவத்தினைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிகிச்சை பெற்றுவரும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதேபோல், ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று பணியாளர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது தூய்மைப் பணியாளர்கள் தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும், ஊதியம் மற்றும் விடுமுறை தொடர்பான பல கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இதுகுறித்துத் தவெக எம்.எல்.ஏ ரமேஷ் குமார் குற்றஞ்சாட்டிப் பேசுகையில், “உணவு சமைத்த ஒப்பந்த நிறுவனம் ஹைதராபாத்தைச் சேர்ந்தது. நமது ஊரிலே தகுதிவாய்ந்த நிறுவனங்கள் இருக்கும் போது கடந்த ஆட்சியில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மீது உரிய ஆய்வு நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பாஜக கண்டனம்

இதேபோல், பாஜக மாவட்ட தலைவர் மகேந்திர சிம்மா மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆவடி மாநகராட்சி ஊழல் மலிந்து காணப்படுகிறது; தூய்மைப் பணியாளர்களுக்குச் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதில்லை. ரீல்ஸ் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம்தான். கோவில் பிரசாதத்தில் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும் என ஆய்வு செய்யும் இந்த அரசு, தூய்மைப் பணியாளர்களுக்குத் தயாரிக்கும் உணவை ஆய்வு செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” எனத் தாக்கிப் பேசினார்.

“மருத்துவர் அய்யா வாழும் காலத்திலேயே பாமக ஆட்சி!” – பாமக பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு!

MUST READ