ஆவடி ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில், ‘எஸ்கலேட்டர்’ எனப்படும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


முக்கியத்துவம் வாய்ந்த ஆவடி ரயில் நிலையம்:
ஆவடி ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகளும், 6 இருப்புப் பாதைகளும் உள்ளன. இங்கிருந்து தினமும் 285 மின்சார ரயில்களும், 5 விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஆவடியில் ஹெச்.வி.எஃப் (HVF), ஓ.சி.எஃப் (OCF), இந்திய விமானப்படைத் தளம் மற்றும் ராணுவப் படைப் பிரிவுகள் உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
தினமும் 5 லட்சம் பயணிகள் பயணம்:
சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் என தினமும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
2 ஆண்டாகத் தொடரும் இழுபறி:
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவடி ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில், பயணியரின் வசதிக்காக எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பணி முடிவடையாமல் இழுபறியாகவே நீடித்து வருகிறது. இந்தப் பணிகள் எப்போது நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை:
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் படிகளில் ஏறி இறங்க முடியாமல் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடித்து உடனடியாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
