கரூர் வெண்ணமலை அட்லஸ் மைதானத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் குடிநீரின்றித் தவித்த சம்பவமும், அனுமதி அட்டை (பாஸ்) கிடைக்காததால் கட்சித் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாகத்தில் தவித்த 2,500 காவலர்கள்!
முதல்வர் வருகையையொட்டி கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் அட்லஸ் மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கு முறையான குடிநீர் வசதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தாகத்தால் தவித்த காவலர்கள், அந்த வழியாக வந்த ஒரு குடிநீர் வாகனத்தை அதிரடியாக நிறுத்தி, தங்களிடம் இருந்த காலி தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரைப் பிடிப்பதற்காக முண்டியடித்தனர். பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களே குடிநீருக்காக அலைந்த காட்சி அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.

5,000 பேருக்கு மட்டுமே அனுமதி; மக்கள் ஏமாற்றம்
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மொத்தம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்பட்டு, அவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழக முதல்வரைக் காண்பதற்காக நுழைவாயில் முன்பு ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர்.
தொண்டர்கள் – போலீசார் இடையே காரசார வாக்குவாதம்
நுழைவாயில் அருகே மக்கள் கூட்டம் அதிகரித்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், தொண்டர்களை அங்கிருக்கக் கூடாது எனக்கூறி விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
கட்சித் தொண்டர்களின் ஆதங்கம்:
“தமிழக முதல்வரை நேரில் காண்பதற்காக எங்களது அன்றாட வேலையை விட்டுவிட்டு, இந்த வெயிலிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்துக் கிடக்கிறோம். ஆனால், எங்களை உள்ளே விடாமல் போலீசார் அலைக்கழிக்கின்றனர். நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பாஸ்கள் அனைத்தும் கட்சி நிர்வாகிகள் தங்களுடைய உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்துக் கொண்டுள்ளனர். சாதாரண மக்களாகிய நாங்கள் கேட்டால் பாஸ் முடிந்துவிட்டது எனக் கூறி ஏமாற்றுகிறார்கள்” என்று தொண்டர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
தொண்டர்களின் இந்த திடீர் கொந்தளிப்பால் வெண்ணமலை அட்லஸ் மைதான நுழைவாயில் பகுதி சிறிது நேரம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
